ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளரா? ரசிக்காத பெருந்தலைகள்! ஸ்டாலின் கொளுத்தியது புஸ்வானம் தானோ?
ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியது தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பலர் இதை ரசிக்கவில்லை.
இதனாலேயே நேற்று நடந்த 3 மாநிலங்களில் காங். முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மம்தா, மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்டோர் ஆப்சென்ட் என தகவல். சென்னையில் நேற்று முன்தினம் கருணாநிதி சிலை திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
சோனியா, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்ட மேடையில் அடுத்த பிரதமர் ராகுல் என்று தன் ஆசையை மு.க.ஸ்டாலின் கொளுத்திப் போட்டார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பால் தேசிய அளவில் பெரும் சலசலப்பு உண்டாகியுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சிகள் இதனை ஏற்கவில்லை. பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்தால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குலைந்து விடும் என்று மே.வங்க முதல்வர் மம்தா கூறி விட்டார்.
தேர்தல் முடிந்த பின் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்றார் மம்தா. இதே போன்றுதான் சரத் பவாரும் தற்போதைக்கு பிரதமர் பற்றிய விவாதம் தேவையில்லாதது என்று கூறிவிட்டார்.
தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இதையே ஆமோதிக்கிறார். மாயாவதி, அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் பிரதமராக ராகுலை அறிவிப்பதை ஏற்க மறுக்கின்றனர். இதனாலேயே நேற்று 3 மாநில காங்.முதல்வர்கள் பதவியேற்பு விழாவை மாயாவதி, அகிலேஷ் புறக்கணித்து விட்டனராம்.
கடந்த வாரம் தான் டெல்லியில் 21 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்தது. ஸ்டாலினும் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமராக யாரையும் முன்னிலைப் படுத்துவது இல்லை என்றும் மோடி அரசை அகற்ற வலுவான கூட்டணி அமைப்பது பற்றி மட்டும் பேசப்பட்டது.
ஆனால் சில நாட்களிலேயே ஸ்டாலின் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என்று கண்டிக்கின்றனர். ராகுலை பிரதமராக முன்னிலைப்படுத்த காங்கிரசிலேயே தயக்கம் உள்ளது. காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், தேர்தல் முடிவுக்குப் பின் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பிரதமர் யார் என்பதை அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கூடி முடிவு செய்யப்படும் என்றே கூறியுள்ளார்.
இதனால் பிரதமராக ராகுலை முன்னிறுத்தி ஸ்டாலின் தற்போது கொளுத்திப் போட்ட அஸ்திரம் புஸ்வானம்தானோ?