நள்ளிரவில் முளைத்த ஜெ. சிலை! தஞ்சையில் நடந்த கூத்து!
தஞ்சை ரயில் நிலையம் முன் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகிலேயே நள்ளிரவில் திடீரென ஜெயலலிதா சிலை முளைத்துள்ளது. சிலையை வைத்தது யார்? என்பது தங்களுக்கே தெரியாது என்று ஆளும் அதிமுகவினரும், போலீசாரும் அப்பட்டமாக பொய்யை அவிழ்த்து விடுவதால் பரபரத்து கிடக்கிறது தஞ்சாவூர்.
பொது இடங்களில் சிலை வைக்க தமிழகத்தில் தடை உள்ளது. ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பிறகே சிலை வைக்க அனுமதி கிடைக்கும்.
தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் ரயில் நிலையம் முன் பகுதியில் ஏற்கனவே உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலையை ரயில்வே நிர்வாகம் அகற்ற முயன்றது. ஆனால் அதிமுகவினரின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர். சிலைக்கு இணையாக ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டது பரபரப்பை அதிகரித்துள்ளது. எட்டடி பீடம் அமைத்து எட்டடி உயர வெண்கலச் சிலை வைக்கப்பட்டது யாருக்குமே தெரியாதாம்.
போலீசைக் கேட்டால் தெரியாது என்கின்றனர். ஆளும் கட்சிப் பிரமுகர்களைக் கேட்டாலும் தெரியாது என்று மர்மப் புன்னகை விரிக்கின்றனர்.
அப்ப யார் தான் ஜெ. சிலையை வைத்தது? மொத்தத்தில் ஜெயலலிதா விவகாரம் என்றாலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்ற கதையாகத்தான் உள்ளது.