தேர்தல் நேரம் வரும்போது ஸ்டாலினுக்குப் புரியவைக்கிறேன் - ரௌத்திரமான அழகிரி
தேசிய தலைவர்கள் புடைசூழ நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அழகிரிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 'ரஜினிக்கெல்லாம் அழைப்பு அனுப்பினார்கள். கழகத்துக்கு எதிராக அண்ணன் இல்லை. இப்படிப் புறக்கணிக்கலாமா' என்ற கோபம், அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் சோனியா காந்தி கலந்து கொண்டு சிலைகளை திறந்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்பாகப் பேசிய மு.க.அழகிரி, நிகழ்ச்சி நான் வரப் போவதில்லை. டி.வியில் பார்த்துக் கொள்வேன் என்றார்.
அவர் இப்படிப் பேசினாலும் தன்னை புறக்கணிப்பதை அவர் ஆத்திரத்துடன் கவனித்து வருகிறார். எல்லாம் பணம் படுத்தும்பாடு. ' அப்பா சம்பாதித்துக் கொடுத்ததை யார் யாரெல்லாமோ ஆட்டையப் போடுகிறார்கள். இவர்களை மொத்தமாகக் கருவறுப்பேன்' எனக் கோபத்தோடு பேசியிருக்கிறார்.
மேலும் பேசும்போது, ' அவர்கள் செய்வதெல்லாம் நமக்குத் தெரியாது என நினைக்கிறார்கள். ஒவ்வொன்றாக என்னுடைய கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலருடைய சுயநலத்தால் கட்சியின் கொள்கைளை அடமானம் வைத்துவிட்டார்கள். நடப்பதை வேடிக்கை பார்த்து வருகிறேன். என்னை ஒதுக்கி வைத்ததற்கு யார் காரணம் என்பதும் தெரியும். அவர்களுக்கு என்னுடைய உண்மையான முகத்தை விரைவில் காட்டுவேன்.
தேர்தல் தேதி அறிவிக்கும்போது, தலைவர் பதவிக்கு அவர் தகுதியானவரா எனக் கட்சிக்காரர்களே கேட்கும் அளவுக்கு செயல்படுவேன். நேரம் வரட்டும்...' என ஆடித் தீர்த்துவிட்டாராம்.
மீடியாக்கள் முன்னிலையில் சாந்தமாகக் காட்சியளித்தாலும் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்துவதை ரௌத்திரத்தோடு கவனித்து வருகிறார் அழகிரி.