ஐபிஎல் 2019: உனத்கட் ரூ 8.40 கோடிக்கு ஏலம் விலை போகாத யுவராஜ் சிங்!
2019ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், உனத்கட் ரூ.8.40 கோடிக்கு ஏலம் போனார்.
ஆண்டு தோறும் கிரிக்கெட் திருவிழாவாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், உனத்கட்டை 8.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
டெல்லி கேபிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலை ஏலம் எடுத்துள்ளது.
மோகித் சர்மாவை 5 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அதேபோன்று பிராத்வைட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் விண்டீஸ் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை கடும் போட்டிக்கு நடுவே 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கை இந்த ஆண்டு எந்த அணியும் இதுவரை ஏலம் எடுக்கவில்லை. இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு இந்த நிலமை கிறிஸ் கெய்லுக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வரும் முகமது ஷமியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.