திமுகவுக்கு வாங்க... தங்க.தமிழ்ச்செல்வனிடம் தூது- விக்கெட்டை வீழ்த்துவாரா திண்டுக்கல் ஐ.பெரியசாமி?
சசிகலா, தினகரனுடன் சேர்ந்து எங்களையும் இணைத்துக் கொண்டால் நாங்கள் அதிமுகவில் சேர தயாராக உள்ளோம்’ எனத் தொடர்ந்து பேசி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். திமுகவிலும் ஸ்டாலினிடம் அவர் சார்பாக பேசி வருகிறார் ஐ.பெரியசாமி என்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
தினகரனோடு கடும் மோதலில் இருக்கிறாராம் தங்க.தமிழ்ச்செல்வன். இந்தச் சண்டை நேற்று சசிகலா சந்திப்பிலும் நடந்துள்ளதாம்.
அதிமுகவில் இணைவது குறித்து அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 'அதிமுகவை நாங்கள் வெறுக்கவில்லை. முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை விடுத்துள்ளோம். சசிகலா, டிடிவி தினகரனை விடுத்து அதிமுகவில் நாங்கள் இணைந்து என்ன பயன்?
சசிகலா, தினகரனுடன் சேர்ந்து எங்களையும் இணைத்துக் கொண்டால் நாங்கள் அதிமுகவில் சேர தயாராக உள்ளோம். தற்போது அதிமுக பலம் இழந்துள்ளது. தேர்தல் வந்தால் அக்கட்சி நிச்சயம் மிகப்பெரிய தோல்வியை தழுவும்.
தோல்விக்கு முன் தலைவர்கள் சிந்தித்து, இணைப்பு குறித்து முடிவு எடுக்கவேண்டும். செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எந்தவித பலவீனமும் இல்லை.
திமுகவிற்கு எந்த பலமும் வரப்போவதில்லை. இது ஒரு நாள் தலைப்புச் செய்தி மட்டுமே. செந்தில் பாலாஜி நல்ல மனிதர். அவர் மீது தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் செய்திகள் கண்டிக்கத்தக்கது.
20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துதான் இடைத்தேர்தல் நடைபெறும்' எனக் கூறியிருந்தார்.
அதிமுகவோடு இணைவது தொடர்பாக அவர் பேசும் வார்த்தைகளால் கோபத்தின் உச்சியில் இருக்கிறாராம் தினகரன். இதைப் பற்றி அவரிடமே ஆத்திரப்பட்டு சில வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்.
இந்த அதிருப்தியை அறிந்து, ஐ.பெரியசாமி மூலமாக வலையை விரித்திருக்கிறது திமுக. அன்பில் பொய்யாமொழி மகேஷ் மூலமாக செந்தில் பாலாஜி வளைக்கப்பட்டது போல, தங்கத்தையும் தங்கமாகக் கூட்டி வருகிறேன் என திமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தூதுக்கு மறுப்பு தெரிவித்த தங்க.தமிழ்ச்செல்வன், ' ஜா அணி காலத்திலேயே நாங்கள் ஜெ அணியில் இருந்தோம். அப்படியெல்லாம் சின்னம்மாவுக்குத் துரோகம் செய்துவிட்டு வருவது கடினம். காலம் வரும் போது பார்க்கலாம்' எனக் கூறினாராம்.