அசாம் மாநிலத்தில் ரூ.600 கோடி விவசாய கடன் ரத்து!

விவசாயிகளின் நலனை கருதி ரூ.600 கோடி விவசாயக் கடனை ரத்து செய்து அசாம் மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் பல்வேறு அறிவிப்புகளும், திட்டங்களும் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.

பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று அசாம் மாநிலம். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்த அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் இன்று திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை அசாம் மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் இருந்து ஒரு தொகையை மானியமாக வழங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில அரசின் செய்தி தொடர்பாளர் சந்திர மோகன் பட்வேரி கூறுகையில். முதல்வரின் உத்தரவின் பேரில், அசாம் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் பெரும் வகையில் பொது துறை வங்கி அல்லது கிசான் அட்டையின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையில் இருந்து சுமார் 25 ஆயிரம் அல்லது 25 சதவீதம் அளவிற்கான தொகையை தள்ளுபடி செய்யப்படுகிறது .

இதன் மூலம் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும், அடுத்த நிதி ஆண்டிற்கான வட்டியை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டியில்லா விவசாய கடனை பெற முடியும்.

நாடாளுமன்ற தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அசாம் மாநிலத்தில் பாஜக அரசு விடுத்துள்ள இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை அவரை தூங்க விடமாட்டேன் என பிரச்சார கூட்டத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>