அரசு பள்ளிகளில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகளுக்கு ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏராளமான அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு, முதலாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் ப்ரீகே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி மாதம் முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்கேஜி, யூகேஜி பயில்வதற்கு 53 ஆயிரத்து 993 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 171 மையங்களில் 4803 மாணவர்களும், குறைந்தபட்சமாக, 20 மையங்களில் 422 மாணவர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துதல், கற்றல் திறன் மேம்பாடு, பார்க்கும் திறன், மாணவர்களின் ஆங்கில எழுத்து மற்றும் பேசும் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இதற்காக, 6 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறையும், 1 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை சமூகநலம் மற்றும் மதிய உணவுத்திட்டத் துறையும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.