தாம்பரத்தில் பரபரப்பு: சொத்துக்காக பெற்ற தாயை வெட்டி கொலை செய்த மகன்!
தனக்கு சேரவேண்டிய சொத்து தராததால் ஆத்திரத்தில், பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சரமாரியாக வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (53). இவரது தாய் முத்தம்மாள். இவருக்கு, கூடுவாஞ்சேரியில் 2 ஏக்கர் நிலம் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.
வயது முதிர்வு காரணமாக முத்தம்மாளால் தனியாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேவராஜூம் முத்தம்மாளை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. இதனால், தேவராஜூக்கு முத்தம்மாள் சொத்து வழங்கவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ், முத்தம்மாளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், ஆஜராவதற்காக தனது மகள் விஜயலட்சுமியுடன், முத்தம்மாள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். பின்னர், வழக்கு விசாரணை முடிந்து முத்தம்மாளும், விஜயலட்சுமியும் இரவு 7 மணியளவில் தாம்பரம் பேருந்து நிலையம் வந்தனர். அங்கு, கோவூருக்கு செல்வதற்கான பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த பேருந்தில் ஏறிய தேவராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினார்.
இதில், முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தேவராஜை சுற்றிவளைத்து கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.சொத்துக்காக பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.