விஷாலுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாத தனுஷ் பெரிய படங்களின் போட்டி ரிலீசுக்கு இதுதான் காரணமா?

தனுஷின் மாரி2 பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய தனுஷ், யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் தான் நடுத்தெருவுக்கு வந்திருப்பேன் எனக் கூறினார்.

மேலும், படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் வரிசையாக புகழ்ந்தார். ஆனால், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இயக்குநர் பாலாஜி மோகன் பேசிவிட்டதால், தான் அவர்கள் பற்றி பேசப்போவதில்லை என மேடையிலேயே கூறினார் தனுஷ்.

மேலும், அவரது பேச்சின் இறுதியில், இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ் ஆவது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் இல்லாத விசயம் தான். ஆனால், இந்த போட்டி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்றார். தொடர்ந்து, நண்பர் விஜய்சேதுயின் சீதக்காதி, தம்பி சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிக்கும் கனா மற்றும் நல்ல நண்பர் ஜெயம் ரவியின் அடங்கமறு படங்கள் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார். பின்னர், கன்னட நடிகர் யஷ்ஷுக்கும் எனது வாழ்த்துகள் டிரைலரை பார்த்து மிரண்டு போனேன் என்றார்.

ஆனால், அதனை தமிழில் ரிலீஸ் செய்யும் விஷால் பற்றியோ அவரது பெயரையோ திட்டமிட்டே தனுஷ் தவிர்த்தார். எப்படி, பத்திரிகையாளர் ஒருவர் துருவி துருவி விஜய்சேதுபதியிடம் கேள்வி கேட்டும் அவர், விஷால் பெயரை சொல்லவில்லையோ அதே போன்று தான் நேற்றைய நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது.

இவை அனைத்திற்கும் காரணம் விஷால் தான் என சினிமா வட்டாரத்தில் அல்ல சாமானிய வட்டாரங்களும் பல டீ கடை பெஞ்ச் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

கன்னட நடிகர் யஷ் நடிக்கும் கே.ஜி.எஃப் படம் 4 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் தமிழ் வெளியீட்டு உரிமையை நடிகர் விஷால் கைப்பற்றியுள்ளார்.

யஷ் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதாலும், அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதாலும், மற்ற நடிகர்களின் படங்கள் வெளியீட்டில் விஷால் தலையிட்டு, தடுக்க பார்த்தார். ஆனால், அனைவரும் இளம் நடிகர்கள் மட்டுமின்றி இளம் தயாரிப்பாளர்களும் கூட.

சீமராஜா படத்தில் கடைசி நேரத்தில் நடந்த பிரச்சனையின் காரணமாக விஷாலின் திட்டத்திற்கு சிவகார்த்திகேயன் செவி மடுக்கவில்லை. கனா படத்தை 21ம் தேதி ரிலீஸ் செய்வேன் என உறுதியானார். வடசென்னை படத்தில் தனுஷுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் துணை செய்யவில்லை. அதனால், மாரி 2 படத்தை தள்ளிப்போட தனுஷும் ஒத்துக் கொள்ளவில்லை. 96 பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனையில் கடுப்பாகி இருந்த விஜய்சேதுபதியும் சீதக்காதி படத்தை இந்த வாரம் ரிலீஸ் செய்வதில் திண்ணமானார்.

இதுவே இந்த பல முனை பெரிய நடிகர்களின் இந்த வார ஸ்டார் வாருக்கு காரணமாக அமைந்தது.

இதில், விஷ்ணுவின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்திற்கும் விஷாலுடன் என்ன பகை என்பது சரியாக தெரியவில்லை.

ஆனால், மோதி பார்க்கும் துணிவோடு அனைவரும் களம் காண்கின்றனர்.  பிரதான நடிகர்களின் படங்கள் வெளிவருவதால், விஷால் நினைத்தபடி தமிழகத்தில் யஷ் படம் பெரிய வசூலை ஈட்டுமா என்பது சந்தேகம் தான்.

மேலும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜீரோ படமும் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More News >>