எங்கப்பா தான் சரியான நேரத்தில் கொடுக்கலை! - உதயநிதி என்ட்ரிக்குப் பதில் சொன்ன ஸ்டாலின்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தென்னங்கன்றுகள் வழங்க தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த மரங்களை நாளை மறுநாள் விநியோகிக்க இருக்கிறார் ஸ்டாலின் மகன் உதயநிதி.

அவரது அரசியல் என்ட்ரிக்கு அவசரம் காட்டி வருகிறார் ஸ்டாலின்.

கஜா புயலில் அதிக அளவில் சேதமானது பட்டுக்கோட்டை பகுதி.

அந்த பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மரங்களை சுமார் 50 கிராமங்களுக்கு வழங்க இருக்கிறார் உதயநிதி. இந்த கிராமங்களை தேர்வு செய்தது மா.சு.

இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நவீன ஒட்டு ரக மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை அருகில் உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்குகிறார்.

இதற்கு முன்னதாக அந்தப் பகுதி மக்களுக்கு ஏராளமான நிவாரணப் பொருள்களை வழங்கியிருந்தார் உதயநிதி. இதன் அடுத்தகட்டமாக அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டுகிறார்.

அதற்கேற்ப, அரசியல்ரீதியான கருத்துக்களையும் கூறி வருகிறார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சேடிஸ்ட் பிரதமர் என தாக்கிப்பேசினார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இது தமிழகத்தின் மனசாட்சியின் குரல் என்று பதிவிட்டுள்ளார். மேலும் 'தமிழகத்தை ‘நீட்’டாகக் கொன்றீர். ‘ஒக்கி’-‘கஜா’ புயல் உதவிகளில் புறக்கணித்தீர்.. காவிரி உரிமையில் கழுத்தறுத்தீர்.. ஸ்டெர்லைட் படுகொலைக்கு துணை நின்றீர்.. உங்களை சேடிஸ்ட் என்றது தலைவரின் குரல் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மனசாட்சி! எனப் பதிவிட்டுள்ளார்.

அரசியல் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் செல்லும் உதயநிதி, ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்கிறார் என விமர்சனம் கிளம்பியுள்ளது. அவரை முன்னிறுத்துவது தொடர்பாக கட்சி பொறுப்பாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ' எங்க அப்பா தான் எனக்கு சரியான நேரத்தில் எதையும் கொடுக்கல. எங்க அப்பா போல் இல்லாமல் நான் இருக்கும் போதே என் மகனுக்கான அங்கீகாரத்தை கட்சியில் நிறைவு செய்வேன்' என்றாராம்.

-அருள் திலீபன்

More News >>