தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு விஷாலுக்கு தயாரிப்பாளர்களே வச்சிட்டாங்க வேட்டு!
நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாக முறைகேடு நடப்பதாகவும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இருந்த 7கோடி ரூபாய் பணம் காணாமல் போனதாகவும், இவை அனைத்திற்கும் தயாரிப்பு சங்க தலைவர் விஷால் தான் காரணம் என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒன்று திரண்டு சென்னை திநகரில் உள்ள சங்க அலுவலக கேட்டுக்கு பூட்டு போட்டனர். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அந்த சாவியை கொடுத்து, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் வரை தற்காலிக கமீட்டி ஒன்றை அமைத்து அரசே தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கவும் கோரிக்கை வைக்கவுள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.
மேலும், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதில் விஷாலுக்கு பாசமெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் பணத்தாசை தான் என எஸ்.வி. சேகர் விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பல பெரிய படங்கள் இந்த வாரம் வெளியாவதில் தொடங்கி, திரைப்பட பைரசி வரை பல பிரச்சனைகள் விஷாலை சுற்றி நடைபெற்று வருகிறது. தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், சிம்பு என பல முன்னணி ஹீரோக்களும் விஷால் மீது கோபம் கொண்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் நேரடியாக பகைத்துக் கொள்ள விரும்பாமல் சூசகமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பிரச்சனை இன்று நண்பகல் 12 மணியளவில் விஸ்வரூபம் எடுத்தது.
தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்துக்கு வந்தனர்.
ஆனால், அவர்கள் வந்தபோது சங்கத் தலைவர் விஷால் அங்கு இல்லை. செயலாளர் கதிரேசன் இருந்தார். அவர் வெளியே வந்து போராடிய தயாரிப்பாளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக சங்க அலுவலகத்திற்கு தயாரிப்பாளர்கள் குழு பூட்டு போட்டனர். இந்த சாவியை முதல்வர் பழனிசாமியிடம் கொடுத்து தற்காலிகமாக தயாரிப்பாளர் சங்கத்தை நடத்தவும் கோரிக்கை வைக்கவுள்ளதாக அறிவித்தனர்.
இத்தனை பிரச்சனைகளுக்கும் விஷால் வாயை திறந்து பதில் கூறுவாறா என்பதை பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர். இவை எல்லாவற்றையும் விஷால் தனது அரசியல் ஆசைக்காகவே செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.