ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, கைலாசநாதர் கோவில் பூசாரி தற்கொலை முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் ஓ.ராஜா மீது இருந்து வருகிறது. இதனால், அதிமுகவில் இருந்து அவர் தள்ளியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்ற பின் ஓ.ராஜாவுக்கு கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாக ஓ.ராஜாவை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓ.ராஜா இன்று காலை தான் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.