இனிமே காமெடி இல்லை, ஆக்ஷன் தான் மீண்டும் ஃபைட்டராக மாறிய மொட்ட ராஜேந்திரன்.
பாலாவின் நான் கடவுள் படத்தில் டெரர் வில்லனாக நடித்த மொட்ட ராஜேந்திரன் பின்னர் காமெடியனாக மாறினார். தற்போது மீண்டும் ஃபைட்டராக மாறியுள்ளார்.
பல படங்களில் நடித்துக்கொண்டும் பல படங்கள் கைவசம் வைத்துக்கொண்டும் இருப்பவர் நடிகர் மொட்ட ராஜேந்திரன். இளம் வயது முதலே பல படங்களில் ஃபைட்டராகவும், ஹீரோக்களுக்கு டூப் ஆர்ட்டிஸ்ட்டாகவும், இருந்து வந்த, இவர் நான் கடவுள் படத்தின் மூலம் பயங்கரமான வில்லனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, சிங்கம், உத்தமபுத்திரன் போன்ற சில படங்களில் இரண்டாம் கட்ட வில்லன் மற்றும் அடியாளாக மாறினார்.
அதன் பின்னர் சந்தானத்துடன் இணைந்து, காமெடியனாக தன்னை மாற்றிக் கொண்டு பல படங்களில் மக்களை சிரிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் மொட்ட ராஜேந்திரன் ஃபைட்டராக மாறியுள்ளார்.
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ஒடியன் படத்தில் ஃபைட்டராக நடித்துள்ளார். இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். இந்த ஸ்டண்ட் குருப்பில் ஏற்கனவே மொட்ட ராஜேந்திரன் இருந்ததால் அவருக்கு ஒரு ஃபைட் நடித்து கொடுத்துள்ளார், மொட்ட ராஜேந்திரன்.
படத்தின் கிளைமேக்ஸ்சில் மோகன்லாலுடன் மொட்ட ராஜேந்திரன் செய்யும் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த வருட ஆரம்பத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த ’ஸ்ட்ரீட் லைட்ஸ்’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் மீண்டும் ஒரு ரவுண்ட் வில்லனாக மிரட்டும் திட்டம் உள்ளதாகவும் மொட்ட ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.