மேற்கு தொடர்ச்சி மலையை மிரட்டும் என்ஜிஓக்கள்! எக்கோ டூரிஸம் பெயரால் துரத்தப்படும் பழங்குடிகள்

சுற்றுச்சூழல் தொடர்பாக அரசும் தனியாரும் செய்கின்ற குளறுபடிகளை வெளிப்படையாகச் சொல்வதில் எழுத்தாளர் இரா.முருகவேள் தயக்கம் காட்டியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலிகளைக் காக்கிறோம் என்ற பெயரில் என்ஜிஓக்கள் நடத்தி வரும் வசூல் வேட்டையைப் பற்றியும் அவர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

அவர் கூறுவது இதுதான்:

இன்று புலிகளைப் பாதுகாப்போம் என்ற குரல் உரக்க ஒலிக்கிறது. இந்தியா முழுக்க நாற்பதற்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் நிபந்தனையாக அரசும் என்.ஜி.ஓக்களும் சொல்வது, காட்டுக்குள் பழங்குடிகள் யாரும் இருக்கக் கூடாது என்பதுதான். ' மனிதர்களும் புலிகளும் ஒருபோதும் சேர்ந்து வாழ முடியாது' என்ற கருத்தைத் திரும்பத் திரும்பப் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக பல நூறு கோடி ரூபாய் நிதி வாரி இறைக்கப்பட்டு, ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன. புத்தகங்கள் எழுதப்படுகின்றன. கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், உண்மை என்ன?

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களும் விலங்குகளும் இணைந்துதான் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். வனவிலங்குகளுடன் பழங்குடிகளின் உறவுக்கு எத்தனையோ சான்றுகளைத் தர முடியும். ஆனாலும் அரசும் இந்த என்.ஜி.ஓ-க்களும் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? ஏனென்றால், பழங்குடிகளை காட்டில் இருந்து விரட்டினால்தான், அங்குள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையின்றித் தாரை வார்க்க முடியும்.

மேலும், சுரங்கம் தோண்டவும், சாலை அமைக்கவும், அணை கட்டவும் பழங்குடிகளின் இருப்பு இவர்களுக்குத் தடையாக இருக்கிறது. இவை எவற்றையுமே செய்யவில்லை என்றாலும், மனிதர்களின் காலடி படாத கன்னி நிலம் என்று கூறி 'எக்கோ டூரிஸம்’ நடத்த பழங்குடிகள் அங்கே இருக்கக் கூடாது. இதனால் தந்திரமாக புலியின் பெயரைச் சொல்லி விரட்டுகின்றனர்.

தற்போதைய நிலையில் காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு, தேன், காட்டுப் பழங்கள் போன்றவற்றைச் சேகரிப்பதற்கான உரிமைகள் மட்டும் தான் இருக்கின்றன. இந்தத் திடீர் புலிக் காதலர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நெல்லிக்காய்கள், காட்டின் சிறு உயிர்களுக்கு முக்கியமான உணவு. அந்தச் சிறு உயிர்கள், புலிகளுக்கு உணவு. பழங்குடிகள் நெல்லிக்காய்களை எடுத்துவந்து விற்பதால், சிறு உயிர்களுக்கு உணவு கிடைக்காமல் புலிகள் அழிகின்றன என்று புலிக்கும் நெல்லிக்காய்க்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக, காட்டில் நெல்லிக்காயும் இருக்கிறது. புலியும் இருக்கிறது. இவர்கள் நுணுக்கமாக ஆய்வுசெய்வது போல தந்திரமாகப் பேசுகிறார்கள்.

நம்மிடம் பழங்குடிகள், வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். அதனால் அவர்களை காட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பேசிவிட்டு, பழங்குடிகளிடம் சென்று,நீங்களும் சமவெளி மனிதர்களைப் போல நாகரிகமாகக் கல்வி கற்கவும், மருத்துவ வசதி பெறவும் வேண்டாமா? என்று வேறுமாதிரி பேசுகின்றனர். அதே காட்டில், சுற்றுலாத் துறையின் பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுவதையும், நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதையும் அவர்கள் பேசாமல் மறைக்கின்றனர்.

1972 இல் இந்திய அரசு புலிகளைப் பாதுகாக்க 'புராஜெக்ட் டைகர்' திட்டத்தைச் செயல்படுத்திய போது இந்தியக் காடுகளில் 1,827 புலிகள் இருந்தன. 40 ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட பின்னர், இப்போது புலிகளின் எண்ணிக்கை 1,411. இதுதான் இவர்கள் புலிகளைக் காக்கும் லட்சணம். பழங்குடிகள் கடுமையாகப் போராடியதன் பலனாக, 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 'பழங்குடிகள் பாரம்பரியமாக விவசாயம் செய்துவரும் நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்' என்றது அந்தச் சட்டம்.

அதை அமல்படுத்தக் கூடாது என்று வனத்துறையும், என்.ஜி.ஓ-க்களும் வழக்கு மேல் வழக்குப் போட்டுத் தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் காட்டுக்குள் இருந்தால்தானே நிலம் கேட்கிறார்கள் என்று தந்திரமாக புலிப் பாதுகாப்பின் பெயரால் பழங்குடிகளைக் காட்டைவிட்டுத் துரத்தி அடிக்கிறார்கள். பொதுவாகவே, இந்தியக் காடுகளில் உள்ள கனிம வளங்களைத் தோண்டி எடுக்க, அங்குள்ள பழங்குடிகள் இடையூறாக உள்ளனர் என்பதை, தண்டகாரண்யா காடுகளில் பெற்ற அனுபவத்தின் மூலம் மத்திய அரசு உணர்ந்துள்ளது. ஆகவே, காடுகளை மனிதர்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற முயற்சிக்கின்றனர். இவர்களால் துரத்தப்பட்ட பழங்குடிகள், காடுகளின் வெளியே செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக ரத்தம் சுண்ட மண் சுமக்கின்றனர்.

அவர்களை வைத்து புராஜெக்ட் போட்டு சம்பாதித்த என்.ஜி.ஓ-க்களோ, காட்டுக்குள் ஜீப்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

-அருள் திலீபன்

More News >>