மலேசியாவில் சிக்கிய 49 தமிழர்கள்- களமிறங்கி மீட்ட கனிமொழி
நெல்லை மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்றிருந்தார் கனிமொழி எம்.பி. அன்று இரவு கடையநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார்.
அப்போது, வாசு ஒன்றியம் தலவன்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கனிமொழியிடம் பேசியுள்ளனர். அவர்கள் பேசும்போது, ' மலேசியாவில் வேலைக்கு சென்ற 49 பேர் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை.
நீங்கள்தான் அவர்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியவர், உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்குகிறேன் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக மலேசிய அரசிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார். இன்று காலை மலேசிய அரசிடமிருந்து இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது,
அதில், 49 பேரும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் நலமாக இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை 49 குடும்பங்களுக்கும் தெரிவித்தார் கனிமொழி.
இதனைக் கேட்ட அந்தப் பெண்கள், உங்களால தான் இது நடந்தது. எங்க வீட்டுல 3 வாரமா சோறு பொங்கல. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணே தெரியலம்மா என அழுதுள்ளனர். அவர்களை ஆறுதல் படுத்தியிருக்கிறாராம் கனிமொழி.
- அருள் திலீபன்