அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் எஸ்.பி.வேலுமணி? ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டும் எடப்பாடி ?
அதிமுகவில் தன்னுடைய பிடிமானத்தைப் படிப்படியாக இழந்து வருகிறார் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகின்றனர் சீனியர் அமைச்சர்கள்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாராக இருந்தாலும் எடப்பாடி சொல்வதுதான் கழகத்தின் வேதவாக்காக இருக்கிறது. இதற்கு எதிராகப் பேசுகிறவர்களையெல்லாம் சத்தம் இல்லாமல் ஒதுக்கி வருகின்றனர்.
எடப்பாடி தலைமைக்கு எதிராகப் பேசிய கருணாஸ் உள்ளிட்ட சிலர் மீது கைது நடவடிக்கைகள் பாய்ந்தன. அதே சமயத்தில் தர்மயுத்தம் நடத்தியவர்களையும் ஒரு பொருட்டாக எடப்பாடி பார்க்கவில்லை.
ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த மாஃபா.பாண்டியராஜனுக்கு மட்டும் வலுவில்லாத தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டது. கோவை பிஆர்ஜி அருண்குமார் உள்பட 10 எம்எல்ஏக்களும் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர்.
கே.பி.முனுசாமி துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் வேறு எந்தப் பதவிகளும் அவருக்கு இல்லை. இந்த ஆதங்கத்தை அவர் பல வழிகளிலும் தெரியப்படுத்திவிட்டார்.
இந்த விவகாரம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெடித்தது.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'தர்மயுத்தம் நடத்தியவர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள். கட்சியின் எதிர்காலத்துக்காகத்தான் அவர்கள் தனியே வந்தார்கள். அம்மாவைத் தவிர்த்து தேர்தலை சந்திக்கப் போகிறோம். நமக்கு எந்தவித பேஸ் வேல்யூவும் இல்லை.
நம்மில் உள்ள யாருமே மக்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் கிடையாது. ஒரு சிலரிடமே பதவிகள் குவிந்து கிடக்கிறது. ஒருவருக்கு ஒரு பதவி இருந்தால் மட்டுமே மற்றவர்கள் பயன்பெறுவார்கள். கட்சி வேலையும் நல்லபடியாக நடக்கும்.
தேர்தல் பணிகளும் வேகம் எடுக்கும்' எனக் குறிப்பிட்டார். தற்போது ஓபிஎஸ்ஸிடம் ஒருங்கிணைப்பாளர் பதவியோடு பொருளாளர் பதவியும் இருக்கிறது. இந்தப் பொருளாளர் பதவியை அவருக்குக் கொடுத்தது ஜெயலலிதா.
அதேபோன்று எடப்பாடியாரிடம் சேலம் மாவட்ட செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என மூன்று பதவிகள் உள்ளன. இவற்றை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் ஓபிஎஸ் பேசினார்.
அவரது பேச்சைப் புரிந்து கொண்ட எடப்பாடி தரப்பும் அதுகுறித்து யோசித்து வருகிறது. இந்த சமயத்தில் எடப்பாடியின் விசுவாசிகள் சிலர், ' கழகத்தின் அடுத்த பொருளாளராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும். அவரைவிட இந்தப் பதவிக்குத் தகுதியானவர்களைச் சொல்ல முடியாது. தலைமைப் பண்பிலும் சிறந்தவராக இருக்கிறார். எம்எல்ஏக்களின் தேவையை உணர்ந்து செயல்படுகிறார்' என புளகாங்கிதத்தோடு கூறியுள்ளனர். இதை இவர்களாகச் சொல்கிறார்களா...மந்திரி வேலுமணி தூண்டிவிடுகிறாரா என்ற பேச்சும் எதிரொலிக்கிறது.