என்னை பற்றி கோல் மூட்டுபவர்கள் அத்தனை பேரும் சசிகலாவின் ஸ்லீப்பர் செல்கள்.. டெல்லியை அதிர வைத்த தமிழிசை!
'தமிழிசையால், நமக்கு ஆதரவான கட்சிகளையே அரவணைக்க முடியவில்லை. அவரால் கட்சி தேய்கிறது' என மேலிடத்தில் புகார் கூறியிருக்கிறார்களாம் எதிர்க்கோஷ்டிகள். அவர்கள் எல்லாம் சசிகலாவின் ஏஜெண்டுகள் என மோடிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாராம் தமிழிசை.
லோக்சபா தேர்தல் காலம் நெருங்குவதால், பாஜகவில் யாருக்கெல்லாம் சீட் கொடுப்பது என்ற பேச்சு தொடங்கிவிட்டது. இந்த விவகாரத்தில் தமிழிசையை ஓரம்கட்டிவிட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முன்னுக்கு நிற்க விரும்புகிறார்கள் வானதி சீனிவாசன், ராஜா உள்ளிட்ட தலைவர்கள்.
இதற்காக தமிழிசையின் தகிடுதத்தங்களை எல்லாம் மோடிக்குக் கடிதங்களாக அனுப்பி வருகிறார்களாம். அந்தக் கடிதங்களில், கட்சிக்கு தலைவராக வந்ததில் இருந்தே கட்சி நலத்தைவிட சுயநலத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறார்.
கட்சி மூலமாக செல்வச் செழிப்பாகவும் மாறிவிட்டார். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் சீனியர்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை.
அவர்களைப் பற்றிய கமெண்டுகளை மட்டும் வேண்டுமென்றே கசிய விடுகிறார். எடப்பாடி அண்ட் கோ ஆட்சியை விட, மக்களுக்காக நாம் அதிக நன்மைகளைச் செய்திருக்கிறோம்.
இதைப் பற்றியெல்லாம் அவர் பேசுவதே இல்லை. தன்னை புரமோட் செய்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். எந்த விவகாரம் டிரெண்ட் ஆகும் எனத் தெரிந்து அரசியல் செய்கிறார்.
இதுவரைக்கும் மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கியமான ஆட்கள் யாரையாவது அழைத்து வந்திருக்கிறாரா? பொன்னாருடன் தகராறு செய்வதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.
தலைவர் பதவியில் நீடித்தால் நோட்டாவுக்கும் கீழேதான் நமக்கு வாக்கு கிடைக்கும் என்றெல்லாம் விவரித்துள்ளார்களாம்.
இதனை அறிந்து கோபப்பட்ட தமிழிசை, ஒரு பெண்ணாக நான் அரசியலில் சாதிப்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் வந்த பிறகுதான் குக்கிராமங்களுக்கு எல்லாம் கட்சியைக் கொண்டு சென்றுள்ளேன். தமிழிசை என்ற தனிப்பட்ட ஒருத்தியால்தான் கட்சி வளர்ந்திருக்கிறது. நான் தோற்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆர்கேநகர் தேர்தலில் தனி மனுஷியாகப் பிரசாரம் செய்தேன். எனக்கு எதிராக கோல் மூட்டுபவர்கள் யாராவது களத்துக்கு வந்தார்களா? இவர்கள் எல்லாம் சசிகலாவின் ஏஜெண்டுகள்' என எதிர் அணிக்குப் பதிலடி கொடுத்தாராம்.
இருப்பினும், ஜனவரிக்குள் தமிழிசையை மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் முகாமில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க் கோஷ்டிகள்.
-அருள் திலீபன்