ஜெ. படம் போட்ட கவர்களை மிதித்து போட்ட அதிமுக தொண்டர்கள்- கண்டுகொள்ளாத அமைச்சர் உதயகுமார்!

ஜெயலலிதா இருக்குமிடம் கோயில். அதனால் செருப்பே அணிய மாட்டேன் என்று வெற்றுக் காலுடன் நடந்து விளம்பரம் தேடிக் கொண்டவர் தான் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ஆனால் இன்றைக்கு அவர் நடத்திய விழாவில் ஜெயலலிதா படம் போட்ட அன்பளிப்பு கவர்கள் தொண்டர்களின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமாகிக் கிடந்த காட்சி உண்மையான அதிமுக தொண்டர்களை பரிதவிக்கச் செய்தது.

அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தமது திருமங்கலம் தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், கட்சிக் கூட்டங்களுக்கு தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட புதுப்புது டெக்னிக்குகளை கையாள்வதில் படு கில்லாடி தான். பங்கேற்போருக்கு பிரியாணி பொட்டலத்துடன் சேலை, பேண்ட் - சட்டை, பாத்திரங்கள் என விதவிதமான பரிசுப் பொருட்களுடன் கவரில் கணிசமான பணம் கொடுத்து அசத்துவது அவரது ஸ்டைல்.

அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஆட்களை திரட்டி வர கிராமம் தோறும் மினி வேன்களும் அனுப்பப்படுகின்றன. ஓசியில் கிடைப்பதை விடுவானேன் என அதிமுகவினரை விட பொதுமக்களும் பெருமளவில் திரண்டு விடுகின்றனர்.

இப்படித்தான் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதியும், நிதி ஒதுக்கீடும் அறிவித்த மத்திய அரசுக்கும், முயற்சி மேற்கொண்ட தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்றும் பிற்பகல் அமைச்சர் உதயகுமார் தலைமையில் தடபுடலாக நடந்தது. விழாவில் பங்கேற்போருக்கு பரிசுப் பொருளுடன் கவரில் 500 ரூபாய் பணமும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஏறத்தாழ 10,000 பேருக்கும் மேல் கூட்டம் திரண்டது.

விழா முடிந்தவுடன் பரிசைப் பெற கூட்டத்தினர் முண்டியடித்ததால் கட்டுப்படுத்த போலீசார் திணறினர். கூட்டத்தினரை வரிசைப்படுத்திய பின் விழா மேடையில் நின்றபடி ஜெயலலிதா, எடப்பாடி,ஓ.பி.எஸ் படம் போட்ட பெட்டியில் பெரிய ஹாட் பாக்ஸ் உடன் ஜெயலலிதா படம் போட்ட பணம் வைக்கப்பட்டிருந்த வரையும் வழங்கினார் உதயகுமார்.

மேடையை விட்டு இறங்கும் முன்னரே கவரைப் பிரித்து பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். 500 ரூபாய் நோட்டை எதிர்பார்த்தவர்களுக்கு 2 நூறு ரூபாய் நோட்டுகள் தான் இருந்தன. ரூபாய் நோட்டை எடுத்து அவசரமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஜெ.படம் போட்ட வெற்றுக் கவர்களை விழா மேடை அருகிலேயே அமைச்சர்கள் உதயகுமார் கண்முன்னாலேயே வீசிச் சென்றனர்.

ஜெ. படத்துடன் பளிச்சென்றிருந்த அந்த கவர்கள் சில நிமிடங்களிலேயே கூட்டத்தினரின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானது. இதைக் கண்ட ஒரு சில உண்மையான ஜெ.விசுவாசிகளோ பெரும் வேதனை அடைந்தனர். தெய்வமாக மதிக்கும் அம்மாவின் படத்தை இப்படி மிதிபடச் செய்யலாமா? என பலரும் ஆதங்கப்பட்டனர்.

More News >>