தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி! கூட்டணி அறிவிப்புக்கு தேதி குறித்த பிஜேபி
சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ். ஜனவரி 31ம் தேதிக்குள் யாருடன் நாம் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற தகவல் வெளியாகும் எனப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பாராளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், மமக ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டுவிட்டன. இப்படியொரு அணி உருவாகிவிட்டதை அதிமுக அரசு ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. திமுகவில் கூட்டணி உறுதியாகவில்லை எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படிச் சொல்வதற்குக் காரணம், தொகுதிப் பங்கீடு பிரச்னையில் காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளோடு திமுக சண்டை போடும்.
அந்தச் சண்டையில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இப்படிச் சொன்னார். பிஜேபியும் இதே கணக்கில்தான் இருக்கிறது. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் திண்டாடுவதால் மீண்டும் மோடியை மையமாக வைத்துப் போட்டியிடலாம் என நினைக்கிறார்கள்.
இதைப் பற்றிப் பேசிய ராம் மாதவ், தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்ற திட்டத்துக்கு ஒத்து வரும் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். பொய்யர்களுடனும் ஊழல்வாதிகளுடனும், ஜாமினில் வெளியில் உள்ளோருடனும் பயணிப்பவர்கள் பயணிக்கட்டும். இந்த மாநிலத்தில் திமுக ஆட்சியில் நாங்கள் பாசிசத்தைப் பார்த்திருக்கிறோம்.
ஆகவே அவர்கள் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் தேஜகூவுடன் திமுக கூட்டணியில் இருந்த போது இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல சமன்பாடு நிலவியது, ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் போய் சேர்ந்தவுடன் என்ன ஆனது? எனக் கமெண்ட் அடித்தார்.
அகில இந்திய பிஜேபி நிர்வாகிகள் இப்படிச் சொன்னாலும், தமிழிசை பதவியில் உள்ள காலத்திலேயே பிரமாண்ட கூட்டணி அமைத்துவிட வேண்டும் என ஆசைப்பட்டு, திமுகவுக்குத் தூது அனுப்பி வந்தார். அவரது கோரிக்கையை ஸ்டாலின் நிராகரித்துவிட்டார். எந்தக் கட்சியும் பிஜேபியுடன் அணி சேரத் தயாராக இல்லை. ' வரும் ஜனவரி இறுதிக்குள் நமக்கு ஒத்துவரக் கூடிய சிறிய கட்சிகளையாவது ஒன்று திரட்டி தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நடக்கவே வாய்ப்பு உள்ளது' எனவும் கூறிவிட்டுப் போயிருக்கிறார் அந்த மேலிட நிர்வாகி.