தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: வருவாய் துறையினர் அதிரடி

தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, திநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் இருந்து வருகிறார்.பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது என பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒன்று திரண்ட தயாரிப்பாளர்கள் குழுவினர் விஷாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு விஷால் இல்லாததால் ஆத்திரமடைந்த குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டை போட்டு சாவியை திநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை விஷால் மற்றும் ஆதரவு தயாரிப்பாளர்கள் தி.நகர் காவல் நிலையத்திற்கு திரண்டு சாவியை கேட்டுள்ளனர். ஆனால், போலீசார் சாவியை கொடுக்க மறுத்ததால் விஷாலுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பிறகு, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றதை அடுத்து விஷால் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இதன்பிறகு, மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.இந்நிலையில், சென்னை திநகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் இன்று இரவு சீல் வைத்தனர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினரிடையே உச்சகட்ட மோதல் போக்கு சமாதானமாக மாறும்பட்சத்தில் அலுவலகம் திறக்கப்படும் என்று வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர்.

More News >>