ரசிகர்களை வச்சு செஞ்ச தனுஷ் மாரி 2 விமர்சனம்!

ரசிகர்களை மட்டுமில்ல தனுஷையும் வச்சு செய் செய்னு செஞ்சுருக்காரு இயக்குநர் பாலாஜி மோகன்.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான மாரி படமே சுமாராக தான் ஓடியது. அதற்கு பிறகும் தனுஷை விடாமல் துரத்தி துரத்தி மாரி 2 செய்தே தீருவேன் என அடம்பிடித்த பாலாஜி மோகனுக்கு அட்வைஸ் செய்யாமல், அவரது அன்பு தொல்லை தாங்காமல் தனுஷ் நடித்து நமக்கும் தொல்லை கொடுத்துள்ள படம் தான் மாரி 2.

சூப்பர்ஸ்டார் ரஜினியே மாஸ் காட்சிகளை குறைத்துக் கொண்டு நல்ல படங்களையும், இயக்குநர்களையும் தேடி படம் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மரண மாஸ், பக்கா மாஸ் என வெறும் மாஸ் காட்சிகளை நம்பி ஒரு படம் எடுக்க முடியும் என்றால் அதற்கு உதராணமாக மாரி 2 நிச்சயம் இருக்கும்.

முதல் பாகத்திலாவது, காஜல் அகர்வால், புறா சண்டை என பல விசயங்கள் இருந்தது. இந்த படம் முதல் பாகத்தின் தொடர்சியாக கூட தெரியவில்லை. ஆறுதல் தரும் ஒரே கதாபாத்திரமாக ஆராத்து ஆனந்தியாக சாய் பல்லவி வருவது மட்டும் தான். அதுவும் சில இடங்களில் ஓவர் சீனாகவே தெரிகிறதே தவிர ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை.

கந்தசாமி படத்தில் வரும் மியாவ் மியாவ் பூனை ட்யூனில் ஒலிக்கும் ரெளடி பேபி பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்ததால், சாய் பல்லவி சிறப்பாக ஆடியுள்ளார்.

மத்தபடி படத்தில் வேறு எந்த பாடல்களும் ரசிக்கும் படியாக இல்லை. இரண்டாம் பாதியில் வரும் இளையராஜா பாடல், ரசிகர்களை தூங்கவே வைத்து விட்டது.

ரோபோ சங்கர், வினோத் காமெடி காட்சிகள் படத்திற்கு சிறிது பலத்தை சேர்த்துள்ளது. தனுஷ் வழக்கம் போல, ஒன்னுமே இல்லாத கதைக்கு ஓவராக தனது கடின உழைப்பு மற்றும் காசு போட்டு நல்லாவே நடித்துள்ளார். ஆனால், எல்லாம் விழலுக்கு இரைத்த நீர் போல ஆகிவிட்டது.

சிலுக்குவார் பட்டி சிங்கம் படம் காமெடி படம் என்ற எண்ணத்தோடு போய் பார்க்கலாம். ஆனால், மாரி 2 எந்த ரகம் என்றே சொல்ல முடியவில்லை.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் அரசு அதிகாரியாக வருகிறார். ஆனால், சர்கார் படம் அளவுக்கு அவருக்கு ஸ்கோப் இல்லை. மேலும், மலையாள ஹீரோவான டொவினோ தாமஸ் காட் ஆஃப் டெத் எனும் வில்லனாக வருகிறார். ஆனால், கடைசி வரை அமுல் பேபி வில்லனாகத் தான் தெரிகிறார்.

நண்பனாக வரும் கிருஷ்ணா கதாபாத்திரம், பல படங்களில் பார்த்து புளித்து போன அதே காப்பி பேஸ்ட் கதாபாத்திரம் தான்.

ரவுடிக்கும் வாழ்க்கை இருக்கு, எதிர்காலம் இருக்கு என்ற ஒற்றை லைனை வைத்துக் கொண்டு இயக்குநர் பாலாஜி மோகன் செய்துள்ள மசாலா குருமா தான் மாரி 2.

தனுஷுக்காகவும் சாய்பல்லவிக்காகவும் வேண்டுமானால் ஒரு முறை திரையரங்கில் சென்று படத்தை பார்க்கலாம். ஆனால், இந்த வார ரேஸில் மாரி 2 ஒரு சிறந்த படமாக அமையவில்லை.

மொத்தத்தில் மாரி படம் பேட் மாரி 2 அதன் டேட்!

மாரி 2 சினி ரேட்டிங்: 2.25/5.

More News >>