எய்ம்ஸ்-க்கு ஜெ. பெயர்? அமைச்சர் உதயகுமாருக்கு நோ சொன்ன சுகாதார செயலர் !
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் யார் பெயரும் வைக்கப்பட மாட்டாது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோரிக்கை விடுத்த மறுநாளே சுகாதாரச் செயலாளர் 'நோ' சொன்னது அமைச்சருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதியும், ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயக்குமார் நேற்று பிரமாண்ட விழா எடுத்தார்.
விழாவில் பங்கேற்ற 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஹாட் பாக்ஸ், கவரில் ரூ.200 கொடுத்தார். 500 ரூபாய் கொடுப்பதாக கூறி 200 ரூபாய் மட்டுமே கொடுத்ததால் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் பணத்தை பையில் வைத்துக் கொண்டு ஜெயலலிதா படத்துடன் இருந்த கவர்களை விழா மேடை பகுதியிலேயே வீசிச் சென்றனர். ஜெ.படம் போட்ட கவர்கள் கூட்டத்தினரின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமான சம்பவம் சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்தியாவில் இதுவரை அமைந்துள்ள எந்தவொரு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் தனி நபர்களின் பெயர் வைக்கப்பட்டதில்லை.
இது தெரியாமல் தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற சாக்கில் முந்திரிக்கொட்டையாக ஜெயலலிதா பெயர் சூட்ட வேண்டும் என அமைச்சர் உதயக்குமார் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று மதுரை வந்த சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்படுமா? என செய்தியாளர்கள் கேட்டனர். எய்ம்ஸ் என்ற பெயரில் தான் மருத்துவமனை அமையும். அரசியல் தலைவர்கள் யாருடைய பெயரும் வைக்கப்பட மாட்டாது என்று கூறி அமைச்சரின் கோரிக்கைக்கு ஒரே நாளில் 'நோ' சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.