கோட்டை பக்கமே தலை வைக்க மாட்டேன் - எடப்பாடியை மிரட்டிய இன்னொரு அமைச்சர் வீரமணி

தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில் தலைவராக இருக்கிறார் குமரகுருபரன். கடந்த ஆகஸ்ட் 2017ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.

இவரை மாற்றினால் மட்டுமே சென்னை வருவேன் என ஜோலார் பேட்டையிலேயே கேம்ப் அடித்திருக்கிறார் வணிகவரித்துறை மந்திரி வீரமணி.

பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழக பத்திரப்பதிவுத்துறையில் 575 சார்பதிவு அலுவலகங்கள், 50 மாவட்ட பதிவாளர்கள், 9 மண்டலங்கள் உள்ளன. இதில், சார்பதிவு அலுவலகங்களில் பணிபுரியும் சிலர் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால் குற்றச்சாட்டு இருந்த 25க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்களை உடனடியாக பதிவு பணியில் இருந்து விடுவித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் உத்தரவிட்டார்.

இதில் குற்றச்சாட்டுக்கு ஆளான சார்பதிவாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மந்திரியின் தலையீடு இருந்ததால், அவரோடு நேரடியாக மோதி வருகிறார் குமரகுருபரன்.

அமைச்சர் சொல்லக் கூடிய எந்தப் பணிகளையும் இவர் கண்டுகொள்வதில்லை. பதிவுத்துறையின் சார்பில் மாதம்தோறும் வரக்கூடிய வைட்டமின்களில் சிக்கல் ஏற்பட்டதால், நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார் வீரமணி. 

நான் சொல்லும் எதையும் அந்த அதிகாரி பொருட்படுத்துவதில்லை. இதனால் சொந்த கட்சிக்காரர்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அந்த அதிகாரியை தூக்குங்கள்' எனக் கூறினாராம்.

அதேநேரம், அந்த அதிகாரிக்கு முக்கியமான சீனியர் மந்திரியின் அனுகூலம் இருந்ததால், மாற்றல் உத்தரவு கொடுக்கப்படவில்லை. இதனை எதிர்பார்க்காத மந்திரி வீரமணி, அந்த அதிகாரிக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் போட்ட பிறகு சொல்லுங்கள். சென்னை வருகிறேன். அதுவரையில் வேலூரைத் தாண்ட மாட்டேன் எனக் கூறிவிட்டாராம்.

கடந்த பத்து நாட்களாக அவர் சென்னைக்கும் வரவில்லை. எடப்பாடி அண்ட் கோவும் இதைக் கண்டுகொள்ளவில்லையாம். இதனால் நொந்து நூடுல்ஸாகியிருக்கிறாராம் வீரமணி.ஆனால், எம்பி தொகுதிகளுக்கான தேர்தல் பூத் பணிகளில் தீவிரமாக இருக்கிறேன் என வரக் கூடிய அழைப்புகளுக்கெல்லாம் பதில் சொல்லி வருகிறாராம் கே.சி.வீரமணி.

- அருள் திலீபன்

More News >>