விரைவில் பணம் செட்டில் ஆகும்! - சிறையில் உறுதியளித்த சசிகலா
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன், கடந்த 17ம் தேதி சந்தித்துப் பேசினார்.
அப்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சந்தித்து பேசினர். செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்த பிறகு நடந்த சந்திப்பு இது.
தவிர, சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இருநாள் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்ததால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தினகரன் அறிவித்து இருந்தார்.
ஆனால், அப்பீல் செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தி வந்தனர். காரணம், தேர்தலில் இந்த 18 பேர் போட்டியிட்டாலும், அவர்களது மனுவை தகுதிநீக்கத்தை ஒரு காரணமாகக் கூறி மாநில அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற பயம் தான் காரணம். சசிகலா சந்திப்பிலும் இந்தப் பேச்சு பிரதானமாக இருந்துள்ளது. இணைப்பு முயற்சி பற்றிய கருத்துக்களுக்கு தினகரன் பதில் சொல்லவில்லை. தங்க.தமிழ்ச்செல்வனையும் அவர் பேசவிடவில்லை.
இந்த சந்திப்பு குறித்துப் பேசும் சசிகலா ஆதரவு பிரமுகர் ஒருவர், கூவத்தூரில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்றித் தரவில்லை என்ற கோபம் சிலருக்கு இருக்கிறது. அவர்கள் கொடுத்த உறுதியில் ஒரு சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டது. மீதம் வர வேண்டிய பல கோடி ரூபாய்களைப் பற்றிய பேச்சே இல்லை.
இனியும் கொடுக்காவிட்டால் மற்றவர்களும் மற்ற கட்சிகளுக்கோ எடப்பாடி தரப்புக்கோ போய்விடுவார்கள் என பயப்படுகிறார். உடனே செட்டில் செய்யச் சொல்கிறேன் என தகுதிநீக்க எம்எல்ஏக்களுக்கு அவர் உறுதி கொடுத்துள்ளார். இந்த ஒரு விஷயத்துக்காகத்தான், சின்னம்மாவை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என தினகரனுக்கு நெருக்குதல் கொடுத்து வந்தனர் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் சிலர். இந்தப் பணம் செட்டில் ஆகாவிட்டால், செந்தில் பாலாஜி போல பல விக்கெட்டுகள் பறிபோகும் என்கிறார்.