ஏ.டி.எம்.பணம் ரூ. 1.6 கோடி லபக்! போதை ஊழியரால் குட்டு அம்பலமானது!

ஏ.டி.எம்.மில் நிரப்ப வேனில் கொண்டு சென்ற 1.6 கோடி ரூபாய் பணம் வேன் கவிழ்ந்து மாயமாகிவிட்டதாக நாடகமாடிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திட்டமிட்டு விபத்து நாடகமாடியவர்களிடம் 'உரிய' முறையில் போலீஸ் விசாரிக்க போதையில் இருந்த வேன் டிரைவர் உண்மையை உளறிக் கொட்ட உண்மை வெளிப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தின் நிரப்ப மதுரையில் இருந்து வேனில் ரூ 2. கோடி எடுத்துச் செல்லப் பட்டது. மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன பாதுகாவலர்கள் இருவர், வேன் ஓட்டுநர் மற்றும் வங்கி பொறுப்பாளர் என 4 பேர் சென்றனர்.

முதுகுளத்தூர், கடலாடியில் ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பி விட்டு இரவில் 1.6 கோடி ரூபாயுடன் சாயல்குடிக்கு வேன் சென்ற போது விபத்தாகி கவிழ்ந்து வேனில் இருந்த பணமும் மாயமாகி விட்டதாக 4 பேரும் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்தில் இரவு முழுவதும் தேடியும் பணம் சிக்கவில்லை.

இதற்கிடையே மாவட்ட எஸ்.பி ரமேஷ் சந்த் மீனா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் சிறு காயம் கூட இல்லாததைக் கண்ட போலீசாருக்கு அவர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டது. இதில் வேன் டிரைவர் அன்பு போதையில் இருந்துள்ளார். அவரிடம் உரிய முறையில் விசாரிக்க போதையில் உண்மையை உளறி கொட்டி விட்டாராம்.

விபத்து போல் செட்டப் செய்து பணத்தை வேறொரு காரில் கடத்தி விட்டது தெரிய வந்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மாயமான 1.6 கோடியில் 40 லட்சம் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மீதி பணத்தை காரில் கொண்டு சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை சாயல்குடியில் ஏற்படுத்தியுள்ளது.

More News >>