எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தனிப்பட்ட முறையில் வருத்தமளிக்கிறது: ராமதாஸ் வேதனை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73) பத்திரிக்கைகள் மூலம் எழுத்துப்பணியை தொடங்கி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். சாகித்திய அகாடமி விருது உள்பட 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். பிறந்தது புதுச்சேரி என்றாலும் சென்னையில் தான் பல ஆண்டுகளாக வசித்து புத்தகங்களை எழுதி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் புதுவைக்கு இடம்பெயர்ந்தார் பிரபஞ்சன்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபஞ்சன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போர்க்குணம் மிக்க எழுத்தாளரும், எனது நண்பருமான பிரபஞ்சன் உடல்நலக் குறைவால் புதுவையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.புதுவையில் பிறந்து தஞ்சாவூரில் ஆசிரியராக பணியைத் தொடங்கிய பிரபஞ்சன், பத்திரிகை உலகிலும், இலக்கிய உலகிலும் முத்திரை பதித்தவர். வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர். சாகித்ய அகாடமி, பாஷாபரிசத், தினத்தந்தி நிறுவனத்தின் சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது, இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர்.

பிரபஞ்சன் எனது 30 ஆண்டு கால நண்பர் ஆவார். ‘பெண்ணே நீ’ இதழ், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தினப்புரட்சி ஏட்டில் கட்டுரைகளை எழுதினார். என்னை அடிக்கடி சந்தித்து அரசியல்-சமூக சிக்கல்கள் குறித்து விவாதிப்பார். நானும் அவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்றிருக்கிறோம். மற்ற அரசியல் கட்சித் தலைவரையும் விட என்னுடன் நெருக்கமாக இருந்தவர்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் அவருக்கு படைப்பருவி என்ற விருது வழங்கி சிறப்பித்தேன். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த அவர், விரைவில் நலம் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவு தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எழுத்துலகைச் சேர்ந்த அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

More News >>