விமர்சனம்: அதிகார வர்கத்துக்கு அடிபணியாமல் அடங்கமறு!
அநியாயங்களுக்கும், அதிகார வர்கத்துக்கும் அடங்கறு என்பதை அழுத்தம் திருத்தமாக ஜெயம்ரவியை வைத்து இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கூறியுள்ளார்.
ஒபே தி ஆடர் என்றால் விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்பது பொருள் அதற்கு எதிர்விதமாக செயல்படும் பொருள் தான் அடங்கமறு. எல்லா மேல் அதிகாரிகளும் தனக்கு கீழ் உள்ளவர்கள் அவர்களது கட்டளையின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் அதற்கு எதிர்மாறாக மேலதிகாரிகளை மதிக்காமல் தன் போக்கில் செயல்பட நினைக்கும் சப் இன்ஸ்ப்பெக்டர் கதை தான் இந்த படம்.
பல போலீஸ் படங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரிலீசாகும் அதனை பார்த்து, வேறு புதிய போலீஸ் படம் வந்தாலும், இதில் என்ன புதிதாக சொல்லப்போகிறார்கள் என்ற எண்ணம் பலரிடம் தோன்றும் ஆனால் ஒரு சிலர் நாம் எண்ணுவது தவறு என மாறுப்பட்ட கதையை கொடுப்பார்கள். அப்படித்தான் ஒரு மாறுப்பட்ட கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.
படத்தின் கதைக்களம்:
அன்பான பெற்றோர், அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள் என சந்தோஷமான சூழ்நிலையில் வாழும் ஜெயம் ரவி புதிதாக கிரைம் ப்ராஞ்சில் சப் இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்கிறார். ஒபே தி ஆடர் என அவர் வேலை செய்வதை தடுக்கின்றனர் மேலதிகாரிகள்.
மேலும் ஒரு பெண்ணின் கற்பழிப்பு கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஜெயம் ரவியிடம் வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க நெருங்கும் சமயத்தில் விசாரனை வழக்கு அவரிடம் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதனால் மேலதிகாரிகளின் உத்தரவை மீறி அந்த குற்றவாளிகளை ஜெயம் ரவி கைது செய்கிறார்.
ஆனால், கைது செய்த 15வது நிமிடத்திலேயே அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வருகின்றனர். நல்ல செல்வாக்கும், அதிகாரமும் படைத்தவர்கள் அந்த குற்றவாளிகள். எந்த ஆதாரமும் இல்லை என்று மேலதிகாரிகளால் அந்த குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். அன்று இரவே ஜெயம் ரவி வீட்டில் உள்ள ஒரு குழந்தையை தவிர அனைவரும் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர். கொலை செய்தவர்களை எப்படி ஜெயம் ரவி பழிவாங்குகிறார் என்பது தான் மீதிக்கதை.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் போலீஸ் கதாப்பாத்திரம் என்றாலே ஜெயம் ரவிக்கு சரியாக பொருந்திவிடுகிறது. தனி ஒருவன், போகன் ஆகிய படத்திற்கு பின் இந்த படத்திலும் ஜெயம் ரவி போலீசாக நடித்துள்ளார். குடும்பபாங்கான சென்டிமென்ட் கலந்த பின்னணியில் படம் ஜெயம் ரவிக்கு நன்றாகவே கைக்கொடுக்கும். அதைப்போலவே இந்த படத்திலும் நடந்திருக்கிறது. வேலையை நேசித்து நியாமாக நடக்க நினைக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்களது மேலதிகாரிகளே வில்லனாக அமைந்துவிடுகின்றனர்.
தன் கடமை உணர்ச்சியால் குடும்பத்தை பறிகொடுக்கிறார் ஜெயம் ரவி. அதன்பின் போலீஸ் புத்தியுடன் தன் குடும்பத்தை அழித்தவர்களை எப்படி வேட்டையாடுகிறார் என்பதை இக்காலக்கட்டத்துக்கு ஏற்றவாரு புதுப் புது காட்சிகள் கொடுத்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். இந்த படமும் ஜெயம் ரவியின் வெற்றி படங்களின் பட்டியலில் ஒரு தனி சிறப்பை பெறும் என்பது உறுதி.
ஜெயம் ரவிக்கு காதலியாக ராஷி கண்ணா, படத்தில் ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் வந்துபோகிறார். படத்தின் இடைவேளைக்கு பிறகு ஒரே ஒரு காட்சியில் தான் அவர் வருவார்.
படத்தில் வில்லன் என தனியாக யாரையும் குறிக்கவில்லை ஜெயம் ரவிக்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் மைம் கோபி, இணை ஆய்வாளர் சம்பத் ஆகியோர் ரவியின் கடமை உணர்ச்சிக்கும், பதவிக்கும் வில்லனாக அமைகின்றனர்.
அவர்களுக்கு அடுத்து நான்கு இளைஞர்களும், அவர்களின் செல்வாக்கு மிக்க அப்பாக்களும் ரவிக்கு வில்லனாக அமைகின்றனர். ஆக மொத்தம் இந்த படத்தில் ரவிக்கு 10 வில்லன்கள். அந்த பெண்ணை கற்பழித்து, தனது குடும்பத்தை கொன்ற அந்த நான்கு பேரையும் எப்படி அவர்களது அப்பாக்கள் மூலமே ரவி கொல்கிறார் என்பது தான் கதையின் ஹைலைட். அதிலும் முற்றிலும் டெக்னிகல் விஷயங்களை பயன்படுத்தி மிரட்டியுள்ளனர்.
ஹீரோ ஒரு போலீஸ் என்பதும் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்குவதும் என தமிழ் சினிமா பல முறை அரைத்த மாவை எப்படி புதிய முறையில் அரைத்து சுவையான தோசையை சுட்டு விருந்து படைத்துள்ளனர் என்பதே இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களம்.
தனி ஒருவனுக்கு பிறகு ஒரு நல்ல டெக்னிக்கல் நிறைந்த சிறந்த திரைக்கதை உடைய படம் அடங்கமறு.
நிகழ்கால அரசியல்வாதிகள் செய்யும் செயல்கள் பல இடங்களில் உருவகமாக இயக்குநர் வைத்திருப்பதும் சிறப்பான ஒன்று.
இந்த வார ரிலீஸ் படங்களில் ஆக்ஷன் மற்றும் டெக்னிக்கல் கதை விரும்பிகளுக்கு அடங்கமறு ஒரு பக்காவான படம். குடும்ப ஆடியன்ஸும் படத்தை ரசிக்கலாம் என்பதற்கு ஜெயம் ரவி படத்தில் இருக்கும் விஷயம் ஒன்றே போதும்.
அடங்கமறு சினி ரேட்டிங்: 3.75/5.