எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73) பத்திரிக்கைகள் மூலம் எழுத்துப்பணியை தொடங்கி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். சாகித்திய அகாடமி விருது உள்பட 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். பிறந்தது புதுச்சேரி என்றாலும் சென்னையில் தான் பல ஆண்டுகளாக வசித்து புத்தகங்களை எழுதி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் புதுவைக்கு இடம்பெயர்ந்தார் பிரபஞ்சன்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபஞ்சன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த தமிழ் எழுத்தாளரான திரு.பிரபஞ்சன் அவர்கள் மறைந்தது தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சன் தனது தனித்துவமான தமிழ் நடையால், பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்குக் கொண்டுசென்று, பல்லாயிரம் வாசகர்களை மகிழ்வித்த பெரும் படைப்பாளியாகத் திகழ்ந்தவர்.
திராவிட இயக்கத்தை நட்பு முரணுடன் அணுகிய எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அரசியல் ரீதியாக சில விமர்சனங்களை முன்வைத்தபோதும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர் ஆவார். ஓர் இலக்கியவாதியான தன்னிடம் கலைஞர் வெளிப்படுத்திய அன்பை பல மேடைகளில் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்.
அண்மைக்காலமாக உடல்நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன் அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய வாசகர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சனின் தமிழ்த் தொண்டு என்றென்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.