காளைகளை அடக்கும் காளைகள்.. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பாலமேட்டில் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதனை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் பிரபலமான இடங்களில் ஒன்று பாலமேடு. இந்த போட்டியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள், வீரர்கள் பங்கேற்கின்றனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி வரும் காளைகளை அடக்க வீரர்கள் ஆர்வமாக களத்தில் உள்ளனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கக்காசு உள்பட ஏராளமான பரிசுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெறுவதற்காக சுமார் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயம் அடையும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழுவும் தயார் நிலையில் உள்ளது.