கம்ப்யூட்டர் தகவல்களை வேவு பார்க்க 10 நிறுவனங்களுக்கு அனுமதி - மத்திய அரசு ஷாக் ட்ரீட்மெண்ட்
சிபிஐ உள்ளிட்ட பத்து நிறுவனங்கள், இந்தியாவில் யாருடைய கணினியிலுள்ள தகவல்களையும் சோதிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரிமாற்றத்தில் இருக்கும் மின்னஞ்சல் போன்றவை மட்டுமன்றி, கணினியால் உருவாக்கப்பட்ட மற்றும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களையும் இந்த நிறுவனங்கள் கண்காணிக்க முடியும்.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000த்தின் 69ம் பிரிவு மற்றும் தகவல்தொழில் நுட்ப செயல்பாடுகளை இடைமறித்தல் மற்றும் கண்காணித்தல் விதிகள் 2009 என்பதன் 4ம் விதிப்படி பத்து நிறுவனங்களுக்கு இவ்வகை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபி எனப்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு, சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு துறை, ரா எனப்படும் மத்திய அமைச்சகத்தின் தேசிய புலனாய்வு முகமை, மத்திய போதைப்பொருள் தடுப்பு முகமை, அமலாக்கத் துறை, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம், வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம், டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிக்னல் நுண்ணறிவு இயக்குநரகம் ஆகியவை எந்த தனிப்பட்ட மற்றும் நிறுவனங்கள், அமைப்புகளின் கணினிகளையும் கண்காணிக்க முடியும். சிக்னல் இயக்குநரகம் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் மட்டும் இந்தக் கண்காணிப்பை செய்யலாம்.
பயனர்கள், சேவையளிக்கும் நிறுவனங்கள், கணினிகளின் பொறுப்பாளர்கள் இந்த முகமைகளுக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு ஏழாண்டு சிறைவாசத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம் என்று இந்த அனுமதி கூறுகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.