திருகோணமலையில் அமெரிக்கா ராணுவ முகாம்- இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு!
தமிழீழத்தின் தலைநகராக கருதப்படும் திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை முகாம் அமைக்கப்பட இருப்பதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 1980களின் தொடக்கத்தில் அமெரிக்காவின் வானொலிக்கான கோபுரம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்தே இலங்கையில் தனிநாடு கோரும் ஆயுத குழுக்களுக்கு மத்திய அரசு நேரடியாக பயிற்சி அளித்தது. இந்திரா மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காலத்தில் உருவான இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திலும் கூட இலங்கையை பிற நாடுகள் தளமாக பயன்படுத்தக் கூடாது என்கிற சரத்தும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் ராஜீவ் கொலைக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அதிகாரிகள் தீர்மானிக்கத் தொடங்கினர். இதனால் அண்டை நாடுகள் மீதான இந்தியாவின் பிடி தளர்ந்தது.
குறிப்பாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியது. தற்போது திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட இருப்பதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு மிகப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.