தினகரன் என்ன கட்சியா நடத்துகிறார்? அவரே சுயேட்சை - எடப்பாடி பழனிச்சாமி
கர்நாடகாவில் தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவர் என்ன பெரிய கட்சியா நடத்துகிறார்? அவரே சுயேட்சை வேட்பாளர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக அரசு மதசார்பற்ற அரசு. உயிரோட்டமுள்ள இயக்கம். கட்சியின் அடித்தளமே ஊராட்சி செயலாளர்கள். அவர்கள் அனைவரும் அதிமுகவில் எங்கள் பக்கம் இருக்கின்றனர்.
கமல்ஹாசன் சுற்றுப்பயணம் பற்றியெல்லாம் பதில் சொல்ல முடியாது. இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஒரு சில இயக்கங்கள் தான் நிலைத்து நிற்கிறது. அது அதிமுக தான்.
கர்நாடகாவில் தேர்தல் அறிவித்த பின்னர் அதிமுக வேட்பாளர் யார் என்று முடிவு செய்வோம். தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவர் என்ன பெரிய கட்சியா நடத்துகிறார். அவரே சுயேட்சை வேட்பாளர்.
அவர் ஆர்.கே.நகரில் எப்படி வென்றார் என்பது உங்களுக்கே தெரியும். ஊடகங்கள் தான் அவரை தூக்கிப்பிடிக்கிறீர்கள். அவரை ஜெயலலிதா 10 ஆண்டுகள் வீட்டு பக்கமே வரக்கூடாது என்று கூறியிருந்தார். அதன் பின்னர் கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.
அவரை ஊடகங்கள் தான் தூக்கிப்பிடிக்கிறீர்கள் நாங்கள் பேசினால் கூட 2 நிமிடம் தான் காட்டுகிறீர்கள், தினகரன் பேசினால் 40 நிமிடம் காட்டுகிறீர்கள். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்தி காட்டுகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.