அப்பாடா... பீகாரில் முடிவுக்கு வந்தது பா.ஜ.க. கூட்டணி சீட் பேரம்

பீகாரில் மக்களவை பொதுத் தேர்தலுக்கு பா.ஜ.க., ஐக்கிய ஜனதா, லோக் ஜனசக்தி இடையே கூட்டணி உடன்பாடு இறுதி செய்யப் பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 40 எம்.பி, இடங்களில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 இடங்களிலும் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பீகார் முதல் வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி தலைவர் பஸ்வான், அவருடைய மகன் சிராக் பஸ்வான் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா இன்று அறிவித்தார்.

கடந்த 2014 தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்க மறுத்து நிதிஷ் குமார் கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட்டார். பா.ஜ.க.வுடன் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியும், லோக் ஜனசக்தியும் கூட்டணி அமைத்து 31 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

வரும் 2019 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியில் இடம் பெறுவதால் சீட் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க பா.ஜ.க முன் வந்ததை ஏற்க மறுத்து அக் கட்சி வெளியேறி விட்டது.

பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் கடந்த முறை போட்டியிட்ட 7 தொகுதிகளையும் கேட்டு முரண்டு பிடித்ததால் கடந்த சில நாட்களாக இழுபறி நீடித்தது. பல கட்ட பேச்சுக்குப் பின் பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் தலா 17, பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதி என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 பொதுத் தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 22 இடங்களில் வென்றிருந்தது. வென்ற தொகுதிகளிலும் 5 தொகுதிகளை பா.ஜ.க விட்டுக் கொடுத்து சீட் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>