32 பந்தில் சதம் விளாசி இந்திய வீரர் அபார சாதனை!
சையது முஸ்டாக் அலி தொடரில் டெல்லி வீரர் ரிஷப் பாண்ட் 32 பந்தில் சதம் விளாசி அபார சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான சையது முஸ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அணியும், ஹிமாச்சல பிரதேச அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஹிமாச்சல பிரதேச அணி 20 ஓவர்கல் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஹங்டா 27 பந்துகளில் 40 ரன்களும், தொடக்க வீரர் சோப்ரா 33 பந்துகளில் 30 ரன்களும் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களே ஆட்டக்காரர்களே 11.4 ஓவர்களில் 144 ரன்களையும் கடந்து அணியை வெற்றிபெற வைத்தனர். இதன் மூலம் டெல்லி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பாண்ட் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் [8 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள்] 116 ரன்கள் எடுத்தார்.
இதில் முக்கியமான மற்றொரு அம்சம் என்னவென்றால், ரிஷப் பாண்ட் 32 பந்துகளில் சதம் விளாசினார். இதுதான் இதுவரை அடிக்கப்பட்ட அதிவேக சதங்களில் இரண்டாவது அதிவேக சதம் ஆகும். முன்னதாக கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டி ஒன்றில் 30 பந்துகளில் சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதுதான் உள்ளூர் போட்டியில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகும். முன்னதாக தமிழக வீரர் விபி சந்திரசேகர் 1988-89ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ராணி கோப்பை போட்டியில் 56 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். மேலும், சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் மட்டும் 104 ரன்கள் எடுத்துள்ளார்.