திருச்சியில் கருஞ்சட்டை பேரணி - பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்!

திருச்சியில் தமிழர் உரிமை மாநாட்டையொட்டி பிரம்மாண்ட கருஞ்சட்டை பேரணி தொடங்கியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் 160-க்கும் மேற்பட்ட பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். திராவிடர் இயக்க தலைவர்களான ஆனைமுத்து, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், சுபவீ, ஓவியா, அருள்மொழி, பொள்ளாச்சி மா. உமாபதி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தமிழர்களின் உரிமைகளையும் , வாழ்வாதாரங்களையும் மீட்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் தமிழின உரிமை மீட்பு மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாட்டிற்கு முன்னதாக பிரமாண்ட பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருச்சி உறையூர் சாலை - டாக்டர் சாமிநாத சாஸ்திரி சாலை சந்திப்பில் இருந்து மாலை 4 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இருந்து 160-க்கும் பெரியார் இயக்கங்களின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர். தமிழர்களின் உரிமைகளைக் காக்க முழக்கங்களை எழுப்பியபடியும், பறையிசைத்தும் பேரணியாக சென்றனர். தென்னூர் உழவர் சந்தை அருகே பிரமாண்ட மாநாடு நடைபெறும் திடலை நோக்கி பேரணி செல்கிறது. பேரணி முடிவில் நடைபெறும் தமிழின உரிமை மாநாட்டில் கி.வீரமணி உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகளின் பல்வேறு தலைவர்கள் உரையாற்றுகின்றனர். தமிழின உரிமை மாநாடு மற்றும் பேரணிக்கு அரசு அனுமதி கிடைக்காததால் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெறுகிறது. இதனால் திருச்சியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>