பேரழிவை சந்தித்த இந்தோனேசியா: சுனாமி தாக்குதலால் 282 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானோரின் எண்ணிக்கை 282ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. இதில், அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. இதனால், சுட்டெரிக்கும் வெப்பம் வெளியேறியதுடன் அப்பகுதியே குலுங்கியது.

மேலும், சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் சுமார் 65 அடி உயரத்திற்கு எழுந்து கரையை வந்தடைந்தன. இதில், தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின.

சுனாமியால் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டங்களை அழிந்து தரைமட்டமாகின. கடல்நீர் அசுரவேகத்தில் ஊருக்குள் புகுந்ததால், மக்கள் பலர் அலையில் சிக்கினர்.

இந்த சுனாமி தாக்குதலில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர், இதன் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்து, 750 பேர் காயமடைந்தனர் ஆக கூறப்பட்டது. 30 பேர் காணவில்லை என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 282ஆக அதிகரித்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இந்தோனேசியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் மோடி உறுதி அளித்துள்ளார்.

More News >>