கணினி தகவல்கள் உளவு பார்க்க அனுமதியளித்த உத்தரவு தேவையற்றது: டிடிவி தினகரன் ட்வீட்

கணினி தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு அளித்துள்ள உத்தரவு தேவையற்றது என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

செல்போன் மற்றும் கணினி தகவல்களை கண்காணிக்கவும், இடைமறிக்கவும், சோதனையிடவும் மத்திய அரசு பல்வேறு உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு தவறு செய்திருந்தால் அதை திருத்த வேண்டுமே தவிர அதைக் காரணம் காட்டி பிஜேபி அரசும் தவறு செய்வதை ஏற்க இயலாது. குற்றங்களைத் தடுக்க போதிய சட்டங்களும்,அதிகாரங்களும் உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு ஏற்கனவே இருக்கும்போது இந்த உத்தரவு தேவையற்றது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீது கைவைக்கும் செயல் இது. ஆகவே மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>