தோல்வி பயத்தால் நிதிஷ்குமாரிடம் பா.ஜ.க சரணாகதி - காங்.கூட்டணி கிண்டல்!
பீகாரில் தொகுதி உடன்பாட்டில் நிதிஷ்குமாரிடம் பா.ஜ.க சரணாகதி அடைந்துள்ளதாக காங்.கூட்டணி கட்சிகள் கிண்டல் செய்துள்ளன.
பீகாரில் நீண்ட இழுபறிக்குப் பின் பா.ஜ.க கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது. பா.ஜ.க.வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் சரிசமமாக தலா 17 தொகுதிகளும், பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 பொதுத் தேர்தலில் நிதிஷூடன் கூட்டணி இல்லாமல் 30 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 22 தொகுதிகளை கைப்பற்றியது. தற்போது 17 இடங்களில் போட்டியிட பா.ஜ.க சம்மதித்தது அக்கட்சியின் தோல்வி பயமே காரணம் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன் தேஜ்வி பிரதாப்பும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவர் குஷ்வாகாவும் விமர்சித்துள்ளனர்.
56 அங்குல மார்பளவு கொண்ட பலசாலிகள் என்று தங்களை மார் தட்டிக் கொண்ட பா.ஜ.க, கடந்த தேர்தலில் வெறும் 2 தொகுதிகளில் வென்ற நிதிஷ் குமாரிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்து விட்டது. இதற்கு தோல்வி பயமே காரணம். பண மதிப்பிழப்பை கேள்வி கேட்ட நிதிஷ் குமாருக்கும், பஸ்வானின் மகன் ஷிராக் பஸ்வானுக்கும் பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கும் பா.ஜ.க., தள்ளப்பட்டுள்ளது என்று இருவரும் கூறியுள்ளனர்.