டிசம்பர் 21 ஸ்டார் வாரில் ஜெயிச்சது யாரு?
கடந்த வாரம் வெளியான பெரிய ஹீரோக்களின் 7 படங்களில் அதிக மார்க் வாங்கி ஸ்கோர் செய்திருப்பது அறிமுக தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன் தானாம்.
விஜய்சேதுபதியின் சீதக்காதி டிசம்பர் 20ம் தேதியே ரிலீசானது. ஆனால், அந்த படம் ஒரு மெட்டா டிராமா என்பதால், சினிமா விரும்பிகள் மட்டுமே அதன் பொறுமையான ஓட்டத்துடன் கூடிய கலை படைப்பை ரசித்தனர். சாமானிய மக்கள் விஜய்சேதுபதியின் சீதக்காதியை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. படமும் பாக்ஸ் ஆபிசில் பெரிதாக கல்லா கட்டவில்லை. ஆனால், வெளியான 7 படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் விஜய்சேதுபதியின் சீதக்காதி.
டிசம்பர் 21ம் தேதி உண்மையான ஸ்டார் வார் என்று சொல்லலாம். சிவகார்த்திகேயனின் கனா, ஜெயம் ரவியின் அடங்கமறு, தனுஷின் மாரி 2, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானின் பிரம்மாண்டமான ஜீரோ என 6 படங்கள் ஒரே நாளில் ரிலீசாகின.
இதில், வர்த்தக ரீதியாக முதல் நாளில் தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்கமறு, அதற்கடுத்ததாக சிவகார்த்திகேயனின் கனா வசூலை ஈட்டின.
ஆனால், தனுஷின் மாரி 2 படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழ தொடங்கிய பின்னர், அடங்கமறு மற்றும் கனா படங்கள் இந்த வார சிறந்த படங்களாக பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றன.
விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கு குறைந்த தியேட்டர்களே கிடைத்தன. படத்தில் கதை என்பதெ இல்லாததும், முழுக்க முழுக்க காமெடி படம் என்றாலும், ஆவரேஜ் வெற்றியை அப்படம் ஈட்டியது.
கேஜிஎஃப் படம் ரிலீசாகும் வரை பெரிதாக எதிர்பார்ப்பில்லை ஆனால், ஷாரூகானின் ஜீரோ படம் படு தோல்வியை அடைந்த நிலையில், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியான கேஜிஎஃப் படம் தமிழகத்தை தவிர்த்து மற்ற பகுதிகளில் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை அள்ளி வருகின்றது.
அடங்கமறு மற்றும் கனா என இரண்டு படங்களுக்கான போட்டியிலும், சிவகார்த்திகேயனின் கனா அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று இந்த ரேசில் முதலிடத்தை பிடித்துள்ளது.