சபரிமலையில் இன்றும் பதற்றம் ! சன்னிதானம் அருகே 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - போலீஸ் தடியடி !
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இன்றும் இரு பெண்கள் சன்னிதானம் நோக்கி சென்ற போது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சன்னிதானம் அருகே போலீசார் தடியடி நடத்தியும் கூட்டத்தினர் கலையாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 3 மாதங்களாகி விட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக இன்னமும் 10 முதல் 50 வயது வரை உள்ள ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை.
இதற்காக முயற்சித்த பல பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டு பின் வாங்கினர். கேரள அரசும் பெண்களை தரிசிக்க வைத்து விட வேண்டும் என முனைப்பு காட்டினாலும் இதுவரை முடியவில்லை.
போலீசார் பலத்த பாதுகாப்புடன் பம்பை வரை பெண்களை அழைத்துச் சென்றாலும் அதற்கு மேல் செல்வது இயலாத காரியமாகவே உள்ளது. எதிர்ப்பாளர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடுவதால் பலப் பிரயோகம் செய்து கலவரப் பூமியாக மாற்றவும் போலீஸ் விரும்பவில்லை.
இதனால் இயலாமையை காரணம் காட்டி போலீஸ் கைவிரித்து விடுவதால் பெண்கள் ஐயப்பனை தரிசிக்காமலே திரும்பி விட நேர்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மனிதி அமைப்பின் 12 பெண்கள் நேற்று அதிகாலை முதல் மாலை வரை போராடியும் பக்தர்களின் எதிர்ப்பால் தரிசிக்க முடியாமல் திரும்பினர்.
கேரளாவைச் சேர்ந்த பிந்து, துர்கா என்ற இரு பெண்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி முன்னேறினர். சன்னிதானத்திற்கு ஒரு கி.மீ.முன்னதாக அவர்களை மறித்த பக்தர்கள் மேற்கொண்டு நகர முடியாமல் முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களை கலைக்க லேசான தடியடி நடத்தியும் முடியவில்லை. தொடர்ந்து எதிர்ப்புக் கூட்டம் அதிகரிக்க பெண்கள் இருவரையும் பம்பைக்கு போலீசார் திரும்ப அழைத்துச் சென்றனர்.
சபரிமலை மண்டல பூஜைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெண்கள் தரிசிக்க எதிர்ப்பு போராட்டங்களால் சபரிமலைப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.