சிங்கப்பூரில் கமல் ! அமெரிக்காவில் விஜயகாந்த், ரஜினி, திருநாவுக்கரசர்!!
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் ஒட்டுமொத்த இந்திய அரசியல் களமே பரபரத்துக் கிடக்கும் போது விஜயகாந்த், கமல், ரஜினி, திருநாவுக்கரசர், ஆகியோர் நீ...ண்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளது ஏன்? என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் சூடு பறக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமலுக்கு வரும் மக்களவைத் தேர்தல் தான் முதல் தேர்தல் களம். சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். தேர்தலில் போட்டி உறுதி என்றும், யாருடன் கூட்டணி என்பது குறித்தும் மழுப்பலாகவும் பதிலளித்து விட்டு அவசரமாக சிங்கப்பூர் பறந்து விட்டார்.
அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டு கட்சியை ஆரம்பிப்பது எப்போது என்ற குழப்பத்திலேயே உள்ள ரஜினியும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். பா.ஜ.க, காங்கிரஸ், திமுக, அதிமுக என அனைத்து தரப்பினரிடமிருந்தும் கூட்டணி நெருக்கடி இருப்பதால் எந்தப் பக்கம் ஆதரவு நிலைப்பாடு எடுப்பது என்பதில் ரஜினிக்கு பெரும் குழப்பம்.
இதனால் அவரும் அமெரிக்கா பறந்து விட்டார். இந்நிலையில் கூட்டணி தொடர்பான சறுக்கலால் பதவியே பறிபோகும் ஆபத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் நேற்று நள்ளிரவில் அவசரமாக அமெரிக்கா பறந்துள்ளார்.
மூவருமே பொங்கலுக்கு சில நாட்கள் முன்பு தான் நாடு திரும்பும் திட்டமாம். காங்கிரசுடன் கூட்டணி குறித்த இறுதி பேச்சுவார்த்தையை சிங்கப்பூரில் வைத்தே முடிவு செய்வது கமலின் திட்டமாம்.
ரஜினியோ பா.ஜ.க.வுடன் நெருங்க பயப்படுகிறாராம். நெருக்கடியிலிருந்து தப்பிப்பது குறித்து சாவகாசமாக யோசிக்க வே அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளாராம் ரஜினி. இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் பதவி பறிபோகும் ஆபத்து. பதவி பறிபோனால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தமது நெருங்கிய நண்பரான ரஜினியுடன் விவாதிக்க திட்டமிட்டே திருநாவுக்கரசரும் அமெரிக்கா பறந்து விட்டாராம்.
சமீப காலமாக உடல் நலம் குன்றியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன்உடல் நலம் தேறி பழைய விஜயகாந்த் ஆக வருவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் உள்ளது.