எங்களுக்குத் தேவை 2 விஷயங்கள்தான்! - எடப்பாடிக்கு அமமுக பொறுப்பாளர்கள் டிமாண்ட்

தினகரன் கட்சியில் அமைப்புச் செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் என மூன்று பதவிகளில் இருந்த செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டார். தகுதிநீக்க எம்எல்ஏக்களில் முக்கியமானவர்கள் யாரும் அதிமுகவிலோ திமுகவிலோ இன்னும் இணையவில்லை. அவர்கள் காத்திருப்பது 2 விஷயங்களுக்காகத்தான் என்கின்றனர் அதிமுக பொறுப்பாளர்கள்.

தகுதிநீக்க எம்எல்ஏக்களின் தீர்ப்புக்குப் பிறகு, அப்பீல் செய்வது என தினகரன் முடிவெடுத்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகிவிட்டார் செந்தில்பாலாஜி. அதிமுகவில் இருந்து விலகி வந்த பிறகு, தினகரனுக்கு வலதுகரமாக இருந்தார் செந்தில்பாலாஜி. அவரது பிரிவுக்குப் பிறகு மேலும் 4 பேர் அதிமுகவில் இணையலாம் என்ற தகவல் வலம் வருகிறது. இதைப் பற்றி சேலத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ' அ.ம.மு.க.வில் இருந்து ஒரு சிலர் விலகி வேறு கட்சிக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது அவர்களது விருப்பம்.

பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதையே தான் தற்போதும் நான் கூறுகிறேன். டிடிவி தினகரனை தவிர்த்து மற்ற அனைவரும் தாய் கழகமான அதிமுக-விற்குத் திரும்பலாம். அவர்களை கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ள தலைமை தயாராக உள்ளது' என்று கூறினார்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் தினகரன் பக்கம் இருந்து பத்து முன்னணி பொறுப்பாளர்களையாவது இழுத்துவிட வேண்டும் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக, உளவுத்துறை அதிகாரிகள் சிலர் மூலமாக பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. அப்போது பேசிய அமமுக பொறுப்பாளர் ஒருவர், ' ஒன்றரை வருடமாக தினகரன் பக்கம் இருக்கிறோம். எங்களுக்கு கொடுப்பதாகச் சொன்ன 50 சி இதுவரையிலும் வந்து சேரவில்லை. மாதம்தோறும் கைச்செலவுக்கும் வழிச்செலவுக்கும் மட்டும் பணம் தருகிறார்கள். தொகுதியில் முதல்முறையாக ஜெயித்தும் எம்எல்ஏ அந்தஸ்து இல்லாமல் அனைத்தும் பறிபோய்விட்டது.

ஒரு எம்எல்ஏ பதவியில் இருந்தால் அவருக்கு என்னென்ன வழிகளில் பணம் வருமோ, அவை அனைத்தையும் ஒரே செட்டில்மெண்டில் கொடுத்தால் போதும். ஆட்சியிலும் கட்சியிலும் எடப்பாடி ஸ்ட்ராங் ஆகிவிட்டார். அவரை அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்பதை சின்னம்மாவும் புரிந்து வைத்திருக்கிறார். எங்களுக்குத் தேவை 2 விஷயங்கள்தான். ஒன்று கட்சியில் உயர் பதவி பிளஸ் கேட்கும் தொகை. இதற்கு சம்மதம் தெரிவித்தால் எப்போது வேண்டுமானாலும் இணைப்பை வைத்துக் கொள்ளலாம்' எனக் கூறியிருக்கிறாராம்.

இந்த டிமாண்டுகளைக் கேட்ட எடப்பாடியார், இப்போதைக்கு எந்த வாக்குறுதியும் கொடுத்துவிட வேண்டும். நேரம் வரும்போது அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம். அவர்களது உள்ளூர் செல்வாக்கைப் பொறுத்து தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்போம் எனப் பேசியிருக்கிறாராம். அதிமுக தலைமையின் சிக்னலுக்காக நான்கு தகுதிநீக்க எம்எல்ஏக்கள் காத்திருக்கிறார்களாம்.

-அருள் திலீபன்

More News >>