யாருடன் கூட்டணி சேருவார் டாக்டர் ராமதாஸ்? அச்சத்தில் விசிக, தேமுதிக

கூட்டணி அமையாமல் திண்டாடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. எந்தப் பெரிய கட்சியும் அதனோடு கூட்டு சேர விரும்பாததுதான் காரணம். இதனால், விடுதலைச் சிறுத்தைகளும் தேமுதிகவும்தான் அதிகம் பாதிப்படையப் போகின்றன என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

லோக்சபா தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய திரண்டுவிட்டன. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி அமையவில்லை.

அதேபோன்று பாமகவும் தேமுதிகவும் அமமுகவும் கூட்டணி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் ஐந்தரை சதவீத வாக்குகளை எடுத்திருந்தாலும் பாமகவை யாரும் ஏறெடுத்து பார்க்கவில்லௌ.

அன்புமணியின் தனித்துவத்தை எந்தக் கட்சியும் ஆராதனை செய்யவில்லை. ஒரே காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி வெளியிட்ட சவால்கள்தான்.

அந்த சவால்களை திமுக தலைமை மறக்கவில்லை. நம்முடைய பேச்சுக்களே நமக்கு வினையாக வந்துவிட்டன என்ற எரிச்சலில் இருக்கிறார் ராமதாஸ்.

அரசியல் களத்தில் துணை இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கும் அமமுக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது பாமக. ஆனாலும், பெரிய கட்சி எதாவது நம்மை சேர்த்துக் கொள்ளாதா என்ற ஆதங்கம், அன்புமணிக்கு இருக்கிறது.

அதே நேரத்தில் தற்போதைய அரசியல் களம் அப்படி எளிதாக இல்லை எனக் கூறும் அரசியல் நோக்கர்கள், ' பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி பற்றிய முடிவு தெரிந்த பிறகுதான் சிறுத்தைகளுக்கும் தேமுதிகவுக்கும் டிமாண்ட் ஏற்படும். எந்தக் கூட்டணியும் அமையாவிட்டால், தனித்துப் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ராமதாஸ்.

இடஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் வெளியில் தெரிந்த கட்சி பாமக. சமூகநீதிக்காக போராடிய கட்சி என்ற அடிப்படையிலும் பார்க்கப்படுகிறது. வன்னியர் மட்டுமல்லாமல், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் உள்ளடக்கிக் கடந்த சட்டமன்றத் தேர்தலை பாமக எதிர்கொண்டது.

5.5 சதவீத வாக்குகளோடு அந்தக் கட்சி பலமுடன் இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இறந்த பிறகு வடமாவட்டத்தில் பாமக வலுவான கட்சியாக மாறிவிட்டது. மீண்டும் போட்டியிட்டால் 20 சதவீதத்துக்கும் மேல் பாமக வாக்குகளைப் பெறும் என்ற வாதமும் உள்ளது.

இந்தக் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தேமுதிகவுக்கும் இடையில் வருத்தத்தைக் கொடுத்துள்ளது. காரணம், பாமகவுக்கு எதிராகத் திரண்டு வெற்றி பெற்ற கட்சி தான் விடுதலைச் சிறுத்தைகள். 2001ல் திருமாவளவனைப் பயன்படுத்தி திமுக அதிக இடங்களைப் பெற்றது. 2009ல் விசிகவைப் பயன்படுத்தி வடமாவட்டத்தில் பாமகவை வாஷ்அவுட் செய்தது திமுக.

2011 தேர்தலில் பாமகவும் விசிகவும் இணைந்ததால், திமுக தோல்வியடைந்தது. 2014 தேர்தலில் தேமுதிகவோடு சேர்ந்ததால் படுதோல்வியை சந்தித்தது பாமக. இதற்குக் காரணம், விருத்தாசலத்தில் பாமக எதிர்ப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் விஜயகாந்த். தேமுதிக வளர்ந்ததே பாமக எதிர்ப்பில்தான்.

இப்படிப்பட்ட சூழலில், பாமக தனித்துப் போட்டியிடாமல் எதாவது ஒரு அணியில் இருந்தால்தான் விசிகவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணிசமான வாக்குகளும் விசிக அங்கம் வகிக்கும் அணிக்கு வந்துசேரும்.

பாமக தனித்துப் போட்டியிட்டால், விசிகவை வைத்திருப்பதில் திமுகவுக்கு லாபம் இல்லை. எனவே, வரும் தேர்தலில் பாமகவின் முடிவைப் பொறுத்தே திமுகவின் நிலையில் மாற்றம் ஏற்படும். 96ல் பாமகவைக் கழட்டிவிட்டது போல விடுதலைச் சிறுத்தைகளையும் திமுக கழட்டிவிடும். இதையும் மீறி அவர்கள் அடம் பிடித்தால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்வார்கள்' என்கின்றனர்.- அருள் திலீபன்

More News >>