மாட்டைக் கொன்றால் 7 வருடம் மனிதனைக் கொன்றால் 2 வருடம் தண்டனை!
நாட்டின் தற்போதையை சட்ட விதிகள் படி, பசுவைக் கொன்றால் 5, 7,14 வருடங்கள் வரைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. அதேவேளையில், பொறுப்பற்ற முறையில் கார் ஓட்டி அப்பாவி உயிர்களை பறிப்பவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை கொடுக்கத்தான் சட்டத்தில் இடமிருப்பதாக நீதிபதி வேதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேந்த தொழிலதிபர் மகன் உத்ஷவ் பஷின் கடந்த 2008ம் ஆண்டு பி.எம் டபிள்யூ காரை ஓட்டி சென்ற போது , மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அனுஜ் சவுகான் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரின் நண்பர் ஸ்ரீவஸ்த்தவா படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில் உத்ஷவ் பஷீன் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நீதிபதி சஞ்சீவ் குமார், பஷினுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்தார். மேலும் தனது தீர்ப்பில் '' தற்போதையை நிலவரப்படி, நாட்டில் பசுவைக் கொன்றால் கூட 5 ,7, 14 ஆண்டுகள் வரைத் தண்டனை விதிக்க பல்வேறு மாநிலங்களில் சட்ட இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதர்களைக் கொன்றால் இரு ஆண்டுகள் தண்டனை வழங்கத்தான் சட்டம் சொல்கிறது'' எனவும் நீதிபதி வேதனைத் தெரிவித்தார்.