கஜா புயல்: காவிரி டெல்டா விவசாயியின் தற்கொலை வீடியோ- சமூக வலைதளங்காளில் வைரல்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பேசியபடி தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு என்ற பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு அவரது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ காண்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கஜா புயலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்று. மக்கள் வீடுகளை இழந்து நடுரோட்டில் நிற்கும் சூழலுக்கு கஜா புயல் தள்ளியது. தங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த விவசாயமும் கஜா புயல் அடியோடு சூரையாடிவிட்டது. கஜா புயல் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மக்கள் இன்னமும் மீளாதுயரத்தில் தான் இருக்கிறார்கள்.
கஜா புயலால் விவசாயம் அழிந்த நிலையில், வேதனையுடன் விவசாயி இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், இதழியல் படிப்பு முடித்த பட்டதாரியான நான் விவசாயம் மீது இருந்த விருப்பத்தினால் விவசாயம் செய்து வந்தேன். கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து சந்தித்து சென்றபிறகு, மக்களை கைது செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டனர். வீடுகள் இல்லாமல் நடுரோட்டில் சமைத்து சாப்பிட வேண்டிய சூழலில் இருக்கிறோம். போராட்டம் செய்தால் கைது செய்து மக்களை துன்புறுத்துகிறார்கள்.
தற்கொலை செய்துக் கொள்கிறேன் என்பதால் நான் கோழை இல்லை. எனது மரணத்திற்கு பிறகாவது விவசாயத்தையும், விவசாயிகளையும் அரசு காப்பற்ற வேண்டும். என் மரணம் அவர்களுக்கு ஓர் பாடமாக அமையும் என்று குறிப்பிட்ட இளைஞர், அவர் வைத்திருந்த விஷ மருந்தை பாலில் கலந்து குடித்துவிட்டார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நாகப்பட்டினத்தில் உள்ள தெரிந்தவர்களிடம் தற்கொலைக்கு முயன்றுள்ள இளைஞரை காப்பாற்றும்படி வற்புறுத்தி வருகின்றனர்.