கிறிஸ்துமஸின் நாற்பது அடி ரகசியம்!
'எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி' இதுதான் கிறிஸ்துமஸின் மையப்பொருள். குருகிராம் என்னும் குர்கானில் கிறிஸ்துமஸ் இன்னொரு நற்செய்தியையும் கூறுகிறது. 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பண்டிகை கொண்டாடுங்கள்' என்பதே அந்தச் செய்தி.
குப்பைகளை பயனுள்ள பொருள்களாக மாற்றும் 'யூஸ் மீ' என்ற நிறுவனமும் 32வது மைல்ஸ்டோன் (32nd Milestone) என்ற பொழுதுபோக்கு பூங்காவும் இணைந்து குருகிராமில் 40 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை நிறுவியுள்ளன. இந்த மரம் முழுமையும் 200 கிலோ எடைக்கு துண்டு துணுக்கு பொருள்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், கடைகள், வீடுகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட வண்ணமயமான துண்டு துணிகள் மற்றும் தயாரிப்புக்கு பின் மிஞ்சிய உலோக துண்டுகளை கொண்டு இம்மரம் உருவாக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளது.
யூஸ் மீ நிறுவனத்தை சேர்ந்த மீனாக்ஷி சர்மா, "குப்பையில் வீணாக எறியப்பட்டு நிலம் மாசடைவதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடிய 200 கிலோ கிராம் எடையுள்ள வீண்பொருள்களை கொண்டு இம்மரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் 20 பெண்களுக்கு இம்மரம் வேலைவாய்ப்பை அளித்துள்ளது. அவர்களே கலைநயத்துடன் இதை உருவாக்கியுள்ளனர். பண்டிகை காலம் முடிந்த பிறகு, இப்பொருள்கள் இதுபோன்று வேறுவிதத்தில் பயன்படுத்தப்படுமேயன்றி குப்பையில் வீசமாட்டோம். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்வண்ணம் இம்முயற்சியை செய்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் கொண்டாடப்படும் பண்டிகைகள் உண்மையிலேயே இரட்டிப்பான சந்தோஷத்துக்குரியவையே!