தனியே தன்னந்தனியே....! கோட்டைக்கே வராமல் தனிரூட்டில் அமைச்சர்

அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவருக்கு இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், தன்னந்தனியாக தொகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார். 'மக்களே எஜமானர்கள் என்பதை அண்ணன் உணர்ந்துவிட்டார்' என்கிறார்கள் அவரது அடிப்பொடிகள்.

தமிழக அரசின் வணிகவரித்துறை மந்திரியாக இருக்கிறார் வேலூரைச் சேர்ந்த கே.சி.வீரமணி. இவர் மீது சென்னை ஐகோர்ட்டில், ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர். அந்த மனுவில், வேலூரில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தோம். 2010-ம் ஆண்டு இந்த நிலத்தை சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வாங்கினர். அந்த நிலத்தை ரூ.225 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர். அந்த நிலத்தை மேம்படுத்தியதற்காக ரூ.65 கோடி எங்களுக்கு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், பேசியபடி அந்த தொகையை வழங்காமல், அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியுடன், சட்டவிரோதமாக எங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக அமைச்சர் வீரமணிக்கு ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால், எங்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து சட்டசபை செயலாளர், அரசு கொறடா, தமிழக டி.ஜிபி., ஆகியோரிடம் அமைச்சர் உள்ளிட்டோர் குறித்து புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பஞ்சாயத்துக்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பத்திரப்பதிவுத்துறை ஐஜி குமரகுருபரனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். இந்தக் கோரிக்கையை அவர் செவிமடுக்காததால், தொகுதிப் பக்கம் ஒதுங்கிவிட்டார் வீரமணி. சென்னை வந்தும் 10 நாட்களாகிவிட்டன. அமைச்சர் ஏன் கோட்டைக்கு வர மறுக்கிறார் என்ற உண்மை, கட்சிக்காரர்களுக்கும் தெரியவில்லை. இதைப் பற்றிக் கேட்டாலும், எம்.பி தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறேன் என்கிறாராம்.

கடந்த 2 நாட்களாக வேலூர் கிராமங்களில் மக்களைச் சந்தித்து வரும் படங்களை அமைச்சரின் அடிப்பொடிகள் வெளியிட்டுள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் மந்திரி காட்டும் அக்கறையை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர் திமுகவினர். ' எந்தத் தேர்தல் வந்தாலும் என் தொகுதி மக்கள் என்னைக் கரையேற்றுவார்கள்' எனக் கண்ணீர் மல்க பேசி வருகிறார் கே.சி.வீரமணி.

-அருள் திலீபன்

More News >>