கரூரைத் தொடர்ந்து ஈரோடு! - எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் சூழலில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜக அரசை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது திமுக. அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களை பலப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறார் ஸ்டாலின்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் 'மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து ஜனவரி 3-ந்தேதி முதல் கிராம சபை கூட்டங்களை நடத்தி ஊராட்சி பகுதிகளில் திமுக பயணம் மேற்கொள்ளும்' எனப் பேசினார் ஸ்டாலின். மக்களிடம் செல்வது ஒரு பகுதியாக இருந்தாலும் ஏராளமான மாவட்டங்களில் கட்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பே இன்னும் சீர்செய்யப்படவில்லை. பல மாவட்ட செயலாளர்கள், அதிமுகவுடன் சிண்டிகேட் வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். டாஸ்மாக் பார்களுக்கு மறைமுகக் கூட்டாளியாகவும் இருக்கின்றனர்.

இதையெல்லாம் அறிந்த பிறகு, அதிமுகவினருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரித்திருந்தார் ஸ்டாலின். அப்படியும் சில மாவட்ட செயலாளர்கள் திருந்தாததால், புதிய ஆட்களைக் கட்சிக்குள் கொண்டு வரும் வேலைகளைச் செய்து வருகிறார். அந்தவகையில் மேற்கு மாவட்டங்களை பலப்படுத்த செந்தில்பாலாஜியைக் கொண்டு வந்தார். அவரது வருகையால் கரூர் மா.செ நன்னியூர் ராஜேந்திரன், கே.சி.பழனிசாமி, சின்னச்சாமி என சீனியர்கள் பலரும் புகைச்சலில் உள்ளனர். அவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தனி ட்ராக்கில் உலா வருகிறார் செந்தில்பாலாஜி. 'விரைவில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியும் வந்து சேரும்' எனக் கரூர் உடன்பிறப்புகள் பேசி வருகின்றனர்.

கரூரைத் தொடர்ந்து ஈரோடு பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். நேற்று ஈரோடு மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணிச்செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில், அ.தி.மு.க- பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர். இன்னும் ஏராளமான நிர்வாகிகள், வருகின்ற டிசம்பர் 27-ம் தேதியன்று ஈரோட்டில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு கவில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கரூர், ஈரோடு என சுழன்று அடிக்கத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். இதனை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார்கள் மேற்கு மண்டல அதிமுகவினர்.

More News >>