ஞாநியின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தானம்

சென்னை: மறைந்த எழுத்தாளர் ஞாநியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி. இவரது முழு பெயர் ஞாநி சங்கரன். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலையில் ஞாநிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.

இதன்பிறகு, அவரது உடல் கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா தலைவர் வாசன், பாஜக தலைவர் தமிழிசை, தினகரன் எம்.எல்.ஏ உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஞாநியின் உடலுக்கு இன்று பிற்பகல் 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. அதன்பிறகு, அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

More News >>