அப்படியே விஜயகாந்த் மாதிரி... பத்திரிகையாளர்களிடம் எகிறிய மகன் விஜய பிரபாகரன்
விஜயகாந்த் போலவே அதே ஸ்டைலில் அவருடைய மகன் விஜய பிரபாகரனும் செய்தியாளர்களிடம் எகிறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் உள்ளிட்ட அனைத்து மத விழாக்களையும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தவறாமல் தொண்டர்களுடனும், பொது மக்களுடனும் கொண்டாடி பரிசுப் பொருட்களை வழங்குவது வாடிக்கை. உடல் நலம் குன்றிய விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் மனைவி பிரேமலதாவும், அவருடைய இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியனும் சென்றுள்ளனர். இந்நிலையில் தேமுதிக சார்பில் இன்று சென்னையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார்.
குழந்தைகளுடனும், பொதுமக்களுடனும் கிறிஸ்துமஸ் கொண்டாடி கேக், இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார். விஜயகாந்த் எப்படி செய்தியாளர்களை எதிர்கொள்வாரோ அதே ஸ்டைலில் பதிலளித்தார் விஜயபிரபாகரன்.
கேள்வி கேட்கும் நிருபர்களை உற்று நோக்கி அவர்களது பக்கமாக திரும்பியபடியே பளிச்சென்று பதிலளித்தார். நிருபர் ஒருவர் தேமுதிகவில் எதுவும் குழப்பமா? எனக் கேட்க, அந்த நிருபர் பக்கமாக திரும்பி ஒரு குழப்பமும் இல்லை. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் இங்கு தானே உள்ளனர் என்று கையை ஆட்டியபடி நீட்டி முழங்கினார்.
எல்.கே.சுதீஷூக்கும் உங்களுக்கும் பிரச்னை யாமே? என்று கேட்க, என்னை சிறு வயது முதல் தூக்கி வளர்த்தவர். பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைத்தவர். இப்போது அரசியலுக்கும் அழைத்து வந்தவர் மாமாதான். ஏதேனும் குழப்பம் உண்டாக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்று எகிறினார்.
பேட்டி முழுவதுமே விஜயகாந்த் ஸ்டைலிலேயே எதிர்கொண்டார் விஜய பிரபாகரன். என்ன ஒரே ஒரு வித்தியாசம் என்றால், விஜயகாந்த் ஆவேசப்பட்டால் நாக்கை துருத்துவார், அடிக்க கை ஓங்குவார் அல்லது த்தூ.. என காறித் துப்புவார். அது மட்டும் விஜய் பிரபாகரனிடம் மிஸ்சிங்.... மற்ற தெல்லாம் அப்படியே விஜயகாந்த் ஸ்டைல்தான்.